மீடூ புகார் கூறியவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது இல்லை- தமன்னா வருத்தம்

மீடூவில் புகார் கூறிய பெண்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பது இல்லை என நடிகை தமன்னா வருத்தம் தெரிவித்துள்ளார்.

பெண்கள் தங்கள் துறைகளில் பாலியல் அத்துமீறலுக்கு ஆளானதை மீடூ என்ற இயக்கம் மூலம் சமூக வலைதளங்களில் கூற தொடங்கினார்கள். ஹாலிவுட்டில் பிரபலமான இந்த மீடூ இயக்கம் இந்தியாவிலும் தொடர்ந்தது. இதில் பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் மீது குற்றச்சாட்டு பதியப்பட்டது. கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கூறிய புகார் பெரும் சர்ச்சையானது. அதனை தொடர்ந்து இயக்குனர் சுசி கணேசன், நடிகர் அர்ஜுன் ஆகியோர் மீது மீடூ புகார்கள் வந்தன.

நடிகை தமன்னா, ‘மீடூ’ புகார்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- என் இயல்பின் காரணமாக வேலை செய்யும் இடத்தில் பாலியல் துன்புறுத்தலை நான் இதுவரை எதிர்கொண்டதில்லை. நான் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று எனக்குத் தெரியும். அப்படி ஒரு அனுபவம் இல்லாமல் போனது எனது அதிர்ஷ்டமாகவும் இருக்கலாம். ஆனால் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்ட பெண்கள் துணிச்சலாகப் பேசியது நல்லது.

ஆனால் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போவது வருத்தமானது. ஒரு வி‌ஷயம் உங்களைப் பாதிக்கிறது என்று நீங்கள் நினைத்தால், எதிர்த்துப் போராட வேண்டும். நான் உட்கார்ந்து வருத்தப்படுபவள் அல்ல. நான் இவ்வளவு நாட்கள் தாக்குப்பிடிக்கக் காரணம், என்னால் நான் நினைத்தபடி வி‌ஷயங்களைச் செய்ய முடிந்ததுதான். பல வலிமையான, சுயமாகத் துணிந்து நிற்கும் பெண்கள் இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!