பப்பி – விமர்சனம்

நடிகர் வருண்
நடிகை சம்யுக்தா ஹெக்டே
இயக்குனர் நட்டு தேவ்
இசை தரண்
ஓளிப்பதிவு தீபக் குமார்

கல்லூரி மாணவனாக இருக்கும் நாயகன் வருண், வகுப்பறையில் வீடியோ பார்த்த குற்றத்திற்காக சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். வருண் வீட்டிற்கு மேலே குடிவருகிறார் நாயகி சம்யுக்தா. இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்படுகிறது. நண்பர் யோகிபாபுவின் அறிவுரைப்படி சம்யுக்தாவிடம் காதலை சொல்லுகிறார் வருண்.

நாயகியுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் வருணுக்கு, அந்த சூழ்நிலையும் அமைகிறது. இருவரும் ஒன்றாகி சில நாட்களில் சம்யுக்தா, தான் கர்ப்பமாக இருப்பதாக உணர்கிறார். வீட்டிற்கு தெரிந்தால் பிரச்சனை ஆகும் என்று நினைக்கும் இவர்கள் எப்படி இந்த சூழ்நிலையை சமாளித்தார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.

பல படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்த வருண், இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். காதல், காமெடி, செண்டிமெண்ட், நடனம் என நடிப்பில் கவனிக்க வைத்திருக்கிறார். படம் முழுக்க இவரை சுற்றியே கதை நகர்வதால் அதை உணர்ந்து திறம்பட நடித்திருக்கிறார். நாய் மீதான செண்டிமெண்ட் காட்சியில் ரசிக்க வைத்திருக்கிறார்.

நாயகி சம்யுக்தாவிற்கு பொருப்பான கதாப்பாத்திரம். அதை உணர்ந்து நடித்திருக்கிறார். வருணின் நண்பராக வரும் யோகிபாபு படம் முழுவதும் பயணிக்கிறார். பல இடங்களில் காமெடியில் கலக்கி இருக்கிறார். இவருடைய கதாபாத்திரம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. நான் கடவுள் ராஜேந்திரன், கண்டிப்பான அப்பாவாக வரும் மாரி முத்து ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

இளைஞர்கள் இளம் பெண்களுடன் பழக ஆசைப்பட்டு, காதல், அதைத் தொடர்ந்து கர்ப்பமாக்குதல், பின்னர் அதை கலைக்க மருத்துவமனைக்கு செல்கிறார்கள். ஒரு உயிரை கொல்வது மிகவும் தவறு. இந்த மாதிரி தவறுகள் நடக்காமல் ஒரு ஆணும் பெண்ணும் கட்டுப்பாட்டுடன் பழக வேண்டும் என்பதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் நட்டு தேவ். இளைஞர்களுக்கு பிடித்த மாதிரி விழிப்புணர்வு படமாகவும் கொடுத்திருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் கவனிக்க வைத்திருக்கிறார்.

தரண் குமார் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் ஸ்கோர் செய்திருக்கிறார். தீபக் குமாரின் ஒளிப்பதிவு கலர்ப்புல்லாக அமைந்திருக்கிறது.

மொத்தத்தில் ‘பப்பி’ இளைஞர்களுக்கு அறிவுரை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!