தனுஷ் – செல்வராகவன் கூட்டணியில் இணையும் பிரபல இசையமைப்பாளர்

அசுரன் படத்தை தொடர்ந்து தனுஷ், செல்வராகவன் கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் இசையமைக்க இருக்கிறார்.

தயாரிப்பாளர் தாணுவின் தயாரிப்பில் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தமானார் தனுஷ். இதில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அசுரன்’ தற்போது வெளியாகி உள்ளது. இதில் தனுஷ், மஞ்சு வாரியர், இயக்குநர் பாலாஜி சக்திவேல், கென் கருணாஸ், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார்.

‘அசுரன்’ படத்தை தொடர்ந்து, தனுஷ் – மாரி செல்வராஜ் கூட்டணி படத்தை தயாரிக்க உள்ளார் தாணு. இந்த படத்துக்கான கதையை இறுதி செய்து, லண்டனில் பாடல் பதிவுகளை தொடங்கியுள்ளார் மாரி செல்வராஜ். இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார்.

தற்போது கார்த்திக் சுப்புராஜ் படத்தின் படப்பிடிப்புக்காக தனுஷ் லண்டனில் இருப்பதால், அங்கு அவருடன் இணைந்து இந்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து தாணு தயாரிப்பில் அடுத்ததாக செல்வராகவன் – தனுஷ் கூட்டணி இணைகிறது. இதற்கு யுவன்தான் இசையமைப்பாளர் என்று முதலில் தகவல் வெளியானது. ஆனால், தற்போது இசையமைப்பாளராக ஷான் ரோல்டன் பணிபுரிந்து வருவதாக தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்.

இந்த படத்துக்கான பாடல்கள் உருவாக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். கார்த்திக் சுப்புராஜ் படத்தை முடித்துவிட்டு, தனுஷ் சென்னை திரும்பியவுடன் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார். இதனால், செல்வராகவன் படத்துக்கு தேதிகள் எப்போது ஒதுக்கவுள்ளார் என்பது விரைவில் தெரியவரும். ‘அசுரன்’ படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் அடுத்ததாக ‘பட்டாஸ்’ திரைக்கு வரவுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!