“ `நேர்கொண்ட பார்வை’ ரொம்பப் பிடிச்சது… அஜித் நல்ல படங்களில் நடிக்கிறார்!” – சிரஞ்சீவி!

41 வருட சினிமா வாழ்க்கை… 151 படங்கள்… ஒன்பது ஆண்டுக்கால அரசியல் வாழ்க்கை… ஆகியவை இவரது சாதனைகள். ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி – இவரது அடையாளம். அலட்டிக்கொள்ளாத இவரது ரியல் முகம்தான் ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைக்கும் திரை முகம். தனது 150-வது படமான ‘கத்தி’ தெலுங்கு வெர்ஷனில் ‘திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’ என்ற தனது ரீஎன்ட்ரியின் மூலம் இளம் ஹீரோக்களுக்கு அல்லுவிட செய்து அசரடித்தார். ‘அம்முடு லெட்ஸ் கோ கும்முடு’ என இவர் ஆடிய கலர்ஃபுல் ஆட்டம் டோலிவுட்டையே அதிரச் செய்தது. இவரின் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ தரிசனத்துக்காக அவர் ஃபேன்ஸு ச்சால வெயிட்டிங்கு! இந்தப் பட அனுபவம், சினிமா பயணம், குடும்பம், அரசியல் எனப் பல விஷயங்களை அவரிடம் பேசினேன்.

“நீங்களே தமிழ் நல்லா பேசுவீங்களே… பிறகு ஏன் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்துக்கு அரவிந்த்சாமியை டப்பிங் கொடுக்க வெச்சீங்க?”
“சாதாரண படம்னா நானே முயற்சி பண்ணியிருந்திருப்பேன். ஆனா, இது வரலாற்றுப் படம். தூய தமிழும் அதன் உச்சரிப்பும் ரொம்பவே முக்கியம். அரவிந்த்சாமி குரல்ல நல்ல தெளிவு இருக்கும். அதனால அவர்தான் சரியான சாய்ஸ். ‘துருவா’ படத்துல ராம்சரணும் அரவிந்த்சாமியும் சேர்ந்து நடிச்சாங்க. அவருக்கு சரணை ரொம்பப் பிடிக்கும். ‘அப்பாவுக்கு டப்பிங் கொடுக்க முடியுமா’னு சரண் கேட்டவுடன், ‘டீசரைப் பார்த்துட்டு இதுல நானும் ஒரு பகுதியா இருந்தா நல்லாயிருக்குமேனு நினைச்சுக்கிட்டு இருந்தேன். நிச்சயமா டப்பிங் கொடுக்கிறேன்’னு சொல்லி எனக்குக் குரல் கொடுத்தார் அரவிந்த்சாமி. தவிர, இந்தப் படம் ஆரம்பிப்பதும் முடிவதும் ஒரு வாய்ஸ் ஓவரில்தான் இருக்கும். அதை கமல்ஹாசன் பேசினால் நல்லாயிருக்கும்னு தோணுச்சு. அவருக்கு கால் பண்ணி கேட்டவுடனே ஓகே சொல்லிட்டார். எனக்காகவும் இந்தப் படத்துக்காகவும் என் நண்பர்கள் எல்லோரும் முன்வந்து ஆதரவு கொடுத்திருக்காங்க. எல்லோருக்கும் மனமார்ந்த நன்றிகள்”

“ஒன்பது வருடங்கள் நடிக்காமல் இருந்துட்டு, மறுபடியும் சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுக்கும்போது எப்படி இருந்தது?”
“நான் அரசியல்ல இருந்த அந்த ஒன்பது வருடங்கள் வெளியான எந்தப் படத்தையும் பார்க்கலை. அதனால அந்த நேரத்துல யார் சினிமாவுக்குள்ள வந்திருக்காங்க, சினிமா டிரெண்டு எப்படி இருக்குனு எதையுமே ஃபாலோ பண்ணலை. திரும்பவும் நான் நடிக்கலாம்னு முடிவு பண்ணபோது, மக்கள் என்னை ஏத்துக்குவாங்களானு பயம் இருந்தது. அதனாலதான் ஏற்கெனவே வொர்க் அவுட்டான படத்துடைய ரீமேக்ல நடிச்சா ரிஸ்க் கம்மியா இருக்கும்னு முடிவு பண்ணேன். முதல் படம் வெளியாகும்போது எப்படி இருக்குமோ அதே மாதிரி ‘கைதி நம்பர் : 150’ வெளியாகும்போது இருந்தது. அந்தப் படத்துக்கு ரத்னவேலுதான் ஒளிப்பதிவு பண்ணினார். ’20 வருடங்களுக்கு முன்னாடி பார்த்த மாதிரி இருக்கு சார். நம்பலைனா நான் எடுத்ததை பாருங்க’னு சொல்லி நான் நடிச்சதைக் காட்டினார். அவர் சொன்ன வார்த்தைகள்தான் எனக்கு நம்பிக்கையைக் கொடுத்தது. மக்களும் அந்தப் படத்தைக் கொண்டாடினாங்க. ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்திலேயும் ரத்னவேலு இருப்பது எனக்குக் கொஞ்சம் தைரியமா இருக்கு.”

“உங்க பையனின் தயாரிப்புல நடிச்சதை ஒரு அப்பாவா எப்படி உணர்றீங்க?”
“நான் ஒரு நடிகராதான் யோசிப்பேன். எப்போதுமே பிஸ்னஸ்மேனா யோசிச்சதில்லை. அல்லு அரவிந்த்தான் எல்லாமே பார்த்துக்குவார். ஆனா, முதல்முறையா ராம்சரண் என்கிட்ட வந்து ‘நான் படங்கள் தயாரிக்கலாம்னு இருக்கேன்’னு சொன்னார். நமக்கு எதுக்கு இதெல்லாம்னு கேட்டேன். ‘நம்ம குடும்பத்திலேயே நிறைய ஹீரோக்கள் இருக்காங்க. அவங்களை வெச்சே படம் தயாரிக்கலாம்’னு சொன்னார். ‘எனக்கு பிஸ்னஸ் மைண்ட் கிடையாது. ஆனா, நீ உன் நடிப்பு கரியரைத் தாண்டி பிஸ்னஸ் பண்ணணும்னு நினைக்கிறது எனக்கு சந்தோஷம்தான். ஆனா, ரொம்ப கவனமா இரு’னு சொன்னேன். என் மகனை முதலாளியா பார்க்கிறது ஒரு அப்பாவா எனக்குப் பெருமையா இருக்கு.”

“பிரமாண்டமான படங்கள் அதிகமா வந்தாலும் சின்ன பட்ஜெட் படங்களையும் மக்கள் கொண்டாடுறாங்க. இந்த பேலன்ஸை எப்படிப் பார்க்குறீங்க?”
“இன்னைக்கு சினிமாக்கள்ல புதுசா என்ன சொல்ல வர்றாங்கன்னுதான் மக்கள் பார்த்து அதைக் கொண்டாடுறாங்க. அதே சமயம் அவங்களுக்குப் பிடிச்ச நடிகர்களின் கமர்ஷியல் படங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்குறாங்க. பெரிய படமோ சின்ன படமோ மக்களுக்கு எமோஷனலா கனெக்ட் ஆகுற நல்ல படங்களை அவங்க கொண்டாடத் தவறியதில்லை. அந்தக் காலத்துல சீனியர்களைத் தாண்டி நாங்க உள்ளே வர்றது ரொம்ப கஷ்டமா இருந்தது. ஆனா, இன்றைக்கு நிறைய இளைஞர்கள் சினிமாவுக்குள்ள வர்றாங்க. அவங்கதான் ஒரு டிரெண்டை செட் பண்றாங்க. அதனால பெரிய படங்கள், வித்தியாசமான சின்ன பட்ஜெட் படங்கள்னு வர்ற இந்த பேலன்ஸ் சரியானதுதான்.”

“அமீர்கான், சல்மான் கான் ரெண்டு பேரும் நிறைய இடங்கள்ல உங்களுடைய ரசிகர்கள்னு சொல்லியிருக்காங்க. அவங்களுக்கும் உங்களுக்குமான பழக்கம் எப்படி?”
“ஒரு காலத்துல அமிதாப் சார் படம், தர்மேந்திரா படம், என் படம், அமீர்கான் படம், சல்மான் கான் படம்னு எங்க எல்லோருடைய படங்களுக்கான ஷூட்டிங்கும் ஊட்டியில் நடக்கும். அப்போ தினமும் ஷூட்டிங் முடிஞ்சு எல்லோரும் ஒன்னாதான் இருப்போம். அங்க ஆரம்பிச்ச நட்பு இன்றைக்கு வரை தொடருது. நான் எப்போ மும்பை போனாலும் அவங்களைச் சந்திப்பேன். அவங்க எப்போ இங்கே வந்தாலும் சந்திச்சுக்குவோம். என்னுடைய பட விழாக்களுக்கு அனில் கபூர், ராஜ்கபூர் சார், அமீர்கான்னு எல்லோரும் விருந்தினரா வருவாங்க. என்னுடைய 60-வது பிறந்தநாளுக்கு ஶ்ரீதேவி, போனி கபூர், ஷாரூக் கான், சல்மான் எல்லோரும் கலந்துக்கிட்டாங்க. எனக்கு தோள்பட்டையில கொஞ்சம் பிரச்னை இருந்தது. அப்போ ‘எனக்கும் இதே பிரச்னை இருக்கு. இந்த டாக்டரை பாருங்க’னு ஷாரூக் கான்தான் எனக்கு டாக்டரை பரிந்துரைச்சார். அப்புறம்தான் எனக்கு ஆப்ரேஷன் நடந்தது. அவங்க படங்கள் வந்தால் பார்த்துட்டு கமென்ட்ஸ் சொல்லுவேன். அவங்களும் என் படம் எப்படி இருக்குனு சொல்லுவாங்க. இந்த மாதிரியான உறவுகள் கிடைக்கிறதுக்கு கொடுத்து வெச்சிருக்கணும்.”

“தெலுங்கு சினிமாத்துறை முழுக்க ஒரே குடும்பம்தான் இருக்காங்கன்னு ஒரு விமர்சனம் இருக்கே. அதை எப்படி பார்க்கிறீங்க?”
“இதுவரைக்கும் எங்க குடும்பத்துல இருக்கிற வருண் தேஜ், சாய்தரம் தேஜ், வைஷ்ணவ தேஜ்னு யார்கிட்டேயும் ‘நீ சினிமாவுக்கு வரணும்; ஹீரோவாகணும்’னு யாரும் சொன்னதில்லை. என் தம்பி பவன் கல்யாண் சினிமாவுக்கு வரணும்னு என் மனைவி ஆசைப்பட்டாங்க. ஆனா, அவருக்கு அதுல ஆர்வம் இல்லை. அப்புறம் நான் சொல்லி புரியவெச்சு அல்லு அரவிந்துடைய தயாரிப்புல முதல் படம் நடிச்சார். பவனை தவிர நான் யாருக்கும் சினிமாவை பரிந்துரைச்சதில்லை. என் மகன் ராம்சரணே சினிமாவுக்கு வரணும்னு நினைக்கலை. அவர் ஒரு பிஸ்னஸ்மேன் ஆகிடுவார்னு நினைச்சேன். ஆனா, அவர் சினிமாவுக்குள்ள வந்துட்டார். இந்த மாதிரி அவங்களுக்கே ஆர்வம் வந்துதான் உள்ள வர்றாங்க. பெரிய குடும்பத்துல இருந்து வந்தாலும், புதுசா சினிமாவுக்கு வந்தாலும் திறமையும் உழைப்பும் இருந்தால்தான் இங்கே நிற்க முடியும். மக்களுடைய அன்பும் ஆதரவும் எங்க குடும்பத்துல நிறைய ஹீரோக்களை உருவாக்கியிருக்கு. அதே சமயம், எந்தச் சூழலிலும் மத்தவங்களை எங்க குடும்பம் ஆதிக்கம் தெலுத்தணும்னு நினைச்சதில்லை. எவ்வளவோ கஷ்டப்பட்டு நிறைய இளம் நடிகர்கள் சினிமாவுக்குள்ள வர்றாங்க. எல்லோரையும் என் தம்பிகளாதான் பார்க்கிறேன். அவங்களும் என்னை அவங்க வீட்ல இருக்கிற ஒரு நபராதான் நினைக்கிறாங்க.”

“டோலிவுட்டை ‘பாகுபலி’க்கு முன்; பின்னு பிரிக்கலாமா?”
“நிச்சயம் பிரிக்கலாம். எந்த சாதனையா இருந்தாலும் ‘பாகுபலி’யோட ஒப்பிட்டுதான் பேசுறாங்க. தெலுங்கு சினிமாவுடைய பலத்தை உலகத்துக்குக் காட்டிய படம் ‘பாகுபலி’. அதனால டோலிவுட்டை ‘பாகுபலி’க்கு முன், பின்னு பிரிக்கலாம். இதுக்கு முன்னாடி 1980-ல் வெளியான ‘சங்கராபரணம்’ படத்தை இந்தியா முழுக்க கொண்டாடினாங்க. அதுக்குப் பிறகு ‘பாகுபலி’ உலகம் முழுக்க பேசப்பட்டது. நான் முன்னாடியே சொன்ன மாதிரி ‘பாகுபலி’தான் நிறைய படங்கள் ஆரம்பிக்க நம்பிக்கையையும் தைரியத்தையும் கொடுத்திருக்கு. டோலிவுட்ல ராஜமெளலியின் ‘பாகுபலி’ ஒரு மாபெரும் புரட்சின்னே சொல்லலாம்.”

“பிரபுதேவா உங்களுக்கு ரொம்ப நெருக்கமாமே?”
“எனக்கு பிரபுதேவாவை ரொம்பப் பிடிக்கும். பிரபுவை 15 வயசில இருந்து எனக்குத் தெரியும். அவங்க அப்பாகூட வருவார். எப்படி அப்படி ஆடுறார்னு தெரிலை. பிரபு ஆடுனா நான் எல்லாத்தையும் மறந்து பார்த்துக்கிட்டே இருப்பேன். ஒருநாள் சுந்தரம் மாஸ்டர்கிட்ட ‘உங்க பையனை மாஸ்டராக்குங்க. என் படத்துக்கு பண்ணட்டும்’னு சொன்னேன். ‘சின்ன பையன் சார். அவனுக்கு தெரியாது’னு சொன்னார். ‘ஷூட்டிங்க்கு அவனையும் கூட்டிட்டு வாங்க. அவன் எனக்கு டான்ஸ் சொல்லிக் கொடுக்கட்டும். நீங்க கூட இருங்க’னு சொல்லி பண்ணவெச்சேன். ஒரு ஷூட்டிங்காக பிரபுவை மலேசியா கூட்டிட்டு போகணும் நினைச்சேன். சின்ன பையன் கார்டியன் இல்லாமல் போகக்கூடாதுனு அவங்க அம்மா அவரைக் கூட்டிட்டு வந்தாங்க. அப்போ இருந்து இப்போ வரை என்னுடைய நிறைய படங்களுக்கு பிரபுதேவாதான் டான்ஸ் மாஸ்டர்.

இந்திய சினிமாவுடைய டான்ஸ்ல ஒரு புரட்சியை ஏற்படுத்தினதில் பிரபு முக்கிய காரணம். என் டான்ஸ் ஸ்டைலை மாத்துனதே பிரபுதான். எங்க வீட்டு தோசை பிரபுவுக்கு ரொம்பப் பிடிக்கும். ஹைதராபாத்துக்கு எப்போ வந்தாலும் வீட்டுக்கு வந்து தோசை சாப்பிட்டுப் போவார். அதே மாதிரி ‘முட்டா மேஸ்த்ரி’ படத்துல பிரபு டீம்ல மூணாவது வரிசையில ஓரமா ஆடிக்கிட்டு இருப்பார் லாரன்ஸ். எனக்கு அவருடைய ஸ்டைல் ரொம்பப் பிடிச்சிருந்தது. அவர் மாஸ்டராக முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கார்னு தெரியவந்தது. ‘ஹிட்லர்’ங்கிற படத்துல மாஸ்டரா எனக்கு டான்ஸ் சொல்லிக்கொடுத்தார். இந்தப் படத்துல எனக்கும் லாரன்ஸுக்கும் நல்ல பெயர் கிடைச்சது. லாரன்ஸ் எனக்கு இன்னொரு தம்பி.”

“நிறைய தமிழ் ரீமேக் படங்கள்ல நடிச்சிருக்கீங்க. ஆனா, இந்தப் படத்துல இந்த கேரக்டர் நம்ம நடிச்சா நல்லாயிருக்கும்னு நினைச்சதுண்டா?”
“நிறைய படங்கள்ல தோணியிருக்கு. நானும் ரஜினியும் தனி ட்ராக். ஆனா, கமல் வித்தியாசமான கேரக்டர்களைத் தேடித்தேடி நடிப்பார். அதனால, கமல்ஹாசன் நடிச்ச எல்லா கேரக்டர்களிலும் நடிக்கணும்னு ஆசைப்பட்டிருக்கேன். குறிப்பா சொல்லணும்னா, ’16 வயதினிலே’ சப்பாணி கேரக்டர் எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும். ஆனா, டான்ஸ், ஸ்டன்ட்னு முழுக்க முழுக்க கமர்ஷியல் படங்களா நடிச்சுட்டு, இந்த மாதிரியான கேரக்டர்ல நடிச்சா மக்கள் ஏத்துக்குவாங்களானு பயம் இருந்தனால கமல் நடிச்சதை மட்டும் ரசிச்சிக்கிட்டேன். கமலுடைய படங்கள் எப்போ பார்த்தாலும் இந்த ஃபீல் வரும்.”

“ரஜினி, கமல் தவிர உங்களுக்கு பிடிச்ச கோலிவுட் நடிகர் யார்? பிடிச்ச இயக்குநர் யார்?”
“ரஜினி, கமல் இவங்களுடைய எல்லா படங்களையும் பார்த்திடுவேன். இவங்களைத் தவிர, எனக்கு ரொம்ப பிடிச்ச நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா, விக்ரம். பிடிச்ச இயக்குநர்கள் ஷங்கர், மணிரத்னம். ஷங்கர் இந்தியாவுடைய பெருமை. ஷங்கரை ஒரு விழாவுல சந்திச்சுப் பேசும்போது, ‘உங்க இயக்கத்துல நடிக்கணும்னு ஆசையா இருக்கு. வாய்ப்பு கொடுங்க’னு கேட்டிருக்கேன். அதேபோல, இந்தியாவுல இருக்கிற வெகுசில கிளாஸான இயக்குநர்கள்ல மணிரத்னமும் ஒருவர்.”

“சமீபமா நீங்க பார்த்து வியந்த பர்ஃபாமென்ஸ் எது?”
” ‘நேர்கொண்ட பார்வை’ ரொம்பப் பிடிச்சிருந்தது. ‘வேதாளம்’, ‘விஸ்வாசம்’னு அவருடைய எல்லா படங்களையும் ரசிச்சுப் பார்க்கிறேன். அஜித் தொடர்ந்து நல்ல படங்களில் நடிக்கிறார்.”

“அடிக்கடி நீங்களும் உங்க மனைவியும் ஜப்பான் போறீங்களே! ஜப்பான்ல என்ன ஸ்பெஷல்?”
“வெளிநாட்டுல இருந்து ஜப்பானுக்கு வர்றவங்களை அவ்வளவு அருமையா கவனிச்சுக்குவாங்க. ஜப்பான் கலாசாரம், ஜப்பான் உணவு எனக்கு ரொம்பப் பிடிக்கும். குறிப்பா, ஜப்பான்ல இருக்கிற கிராமங்கள் அவ்வளவு அழகா இருக்கும். அதனால அடிக்கடி ஜப்பான் போவேன். ஜப்பானுக்குப் பிறகு ஸ்விட்சர்லாந்து ரொம்பப் பிடிக்கும்.”

“உங்களுடைய ஒரு நாள் எப்படி இருக்கும்?”
“நிறைய கதைகள் கேட்பேன். என் சொந்தக்காரப் பசங்களோட நேரம் செலவழிச்சு அவங்களுக்கு வர கதைகளைக் கேட்டு அவங்களுக்கு சில டிப்ஸ் கொடுப்பேன். பேரக்குழந்தைகள் ஸ்கூல்ல இருந்து வந்தா அவங்க கூட விளையாடுவேன். நான் அரசியல்ல இருந்த ஒன்பது வருடங்கள் நிறைய நல்ல படங்கள் வெளியாகியிருக்கு. அப்போ பார்க்காமல் விட்ட படங்களை எல்லாம் ஒவ்வொன்னா பார்த்துட்டு இருக்கேன். தவிர, நெட்ஃபிளிக்ஸ், அமேசான் தளங்கள்ல வர படங்கள், வெப் சீரிஸ்கள் பார்ப்பேன். தினமும் ஜிம்முக்குப் போயிடுவேன். இல்லைனா, அன்றைய நாளே திருப்தியா இருக்காது. ரத்தம் இல்லாமல் நிறைய பேர் உயிர் இழக்குறாங்க. அதனால ஒரு ரத்த வங்கி ஆரம்பிக்கலாம்னு நினைச்சு பண்ணேன். என் ரசிகர்கள் அதுக்கு முழு ஆதரவா இருந்தாங்க, இருக்காங்க. அந்த வேலைகளைக் கவனிச்சுக்குவேன்.”

“ஹீரோக்களுடைய சம்பளம் ரொம்ப அதிகமா இருக்குனு தயாரிப்பாளர்கள் ஒரு விமர்சனத்தை முன்வைக்குறாங்களே?”
“படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே படத்துடைய பட்ஜெட் எவ்வளவு, தயாரிப்பாளருக்கு குறைந்தபட்சம் இவ்வளவு லாபமாவது வரணும்னு பிளான் பண்ணிதான் ஹீரோ தன்னுடைய சம்பளத்தை நிர்ணயிக்கணும். படம் பொருளாதார ரீதியா லாபமடைய ஹீரோ பொறுப்பு ஏத்துக்கணும். யாருக்கு எப்படியோ எனக்கு இவ்ளோ சம்பளம் வேணும்னு ஹீரோ நினைக்கிறது ரொம்பத் தவறு. ஹீரோக்களுடைய பெயர், முகத்தை வெச்சுதான் ஒரு படம் விற்கும், இல்லைனு சொல்லலை. ஆனா, நம்மளை நம்பி காசு போடுறவங்க நல்லாயிருக்கணும்னு ஹீரோக்கள் நினைக்கிறதுதான் சினிமாவுக்கான ஆரோக்யமான சூழல்.”

“ஃபிட்னஸ் சீக்ரெட் என்ன?”
“தினமும் ஒரு மணி நேரம் ஜிம்ல செலவழிப்பேன். என்னுடைய கரியர் ஆரம்பத்திலிருந்தே உடலை நல்லா பார்த்துக்கணும்னு நினைச்சேன். ஆனா, இப்போ எந்த உணவு எடுத்துக்கணும், எது சாப்பிடக் கூடாதுனு ராம்சரண்தான் என் ஃபிட்னஸுக்கான நிறைய டிப்ஸ் கொடுப்பார். பாடி பில்டிங்ல சல்மான் கான்தான் ராம்சரணுடைய குரு. அவர் அங்க என்னா ஃபாலோ பண்றாரோ அதைச் சரணுக்கு சொல்லுவார். சரண் எனக்குச் சொல்லுவார். எனக்கு கடல் உணவுகள்னா ரொம்பப் பிடிக்கும். இப்போ அசைவத்தைக் குறைச்சுட்டு சைவ உணவுகள் அதிகம் சாப்பிடுறேன்.”

“சினிமாவுக்கு வரலைனா என்ன ஆகியிருப்பீங்கன்னு ஏதாவது ஐடியா இருக்கா?”
“என் அப்பா போலீஸா இருந்ததுனால நானும் போலீஸ் ஆகியிருப்பேன்னு நினைக்கிறேன். தவிர, சின்ன வயசில என்.சி.சி-ல (கடற்படை) இருந்தேன். டெல்லியில நடக்கிற குடியரசு தின விழாவுல என்.சி.சி படை அணிவகுப்புல கலந்திருக்கேன். அதனால கடற்படை அதிகாரியாவும் ஆகியிருக்கலாம்.”

“உங்க பேரக்குழந்தைகள் உங்களுடைய படங்கள் பார்த்திருக்காங்களா?”
“அவங்க அப்பா படங்கள்தான் பார்த்திருக்காங்க. அவங்களுக்கு நான் நடிகன்னே தெரியலை. இப்போதான் நான் நடிச்சப் படங்கள் பார்க்க ஆரம்பிச்சிருக்காங்க. நானும் ஶ்ரீதேவியும் நடிச்ச ‘ஜெகதேகா வீருடு அதிலோக சுந்தரி’ படத்தைதான் முதல்ல பார்த்தாங்க. போன வாரம் ‘சங்கர தாதா எம்.பி.பி.எஸ்’ பார்த்துட்டு நல்லாயிருக்குனு சொன்னாங்க.”

“பா.ஜ.க அரசின் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீங்க?”
”மோடி பிளான் பண்ற எல்லா விஷயங்களுக்கும் என்ன முடிவு வரும்னு இப்போ சொல்றதுக்கு நான் ஆராய்ச்சியாளரோ நிபுணரோ இல்லை. அவருடைய திட்டம் எல்லாமே தொலைதூரப் பார்வை கொண்டதுன்னு சொல்றாங்க. அதோட முடிவுகளைக் கண்டுபிடிக்க கால அவகாசம் தேவைப்படும்னும் சொல்றாங்க. ஆனா, இப்போ மக்கள் பயங்கர குழப்பத்துல இருக்காங்கன்றதுதான் உண்மை. நல்லது நடந்திடாதானு எல்லோரும் ஏங்கிட்டு இருக்காங்க. நடக்கும்னு நம்புவோம்.”

“கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத தமிழ்நாட்டு அரசியலை எப்படிப் பார்க்குறீங்க?”
“எதுவும் யாருக்காகவும் காத்திருக்காது. ‘என்.டி.ஆர் சார் இல்லைனா சினிமா என்னாகும்? அவ்ளோதான்’னு பேசினாங்க. ஆனா, சினிமா வழக்கம்போல இயங்கிட்டுதான் இருக்கு. அரசியலும் சினிமாவும் யாருக்காகவும் காத்திருக்காது. யாராவது வந்துக்கிட்டே இருப்பாங்க. நிச்சயமா அங்க அசைக்க முடியாத நபரா யாராவது வருவாங்க. அது இப்போ இருக்கிறவங்களாக்கூட இருக்கலாம்.”

“ஜெகன் மோகன் ரெட்டியின் செயல்பாடுகள் எப்படி இருக்கு?”
“இப்போதான் முதலமைச்சர் ஆகியிருக்கார். ஒரு வருடம் போனால்தான் எதுவும் சொல்ல முடியும்.”

“அடுத்து என்ன படம்?”
“‘மிர்ச்சி’, ‘ஶ்ரீமந்துடு’, ‘பரத் அனே நேனு’ உள்ளிட்ட படங்களை இயக்கிய கொரடாலா சிவா இயக்கத்துல அடுத்த படம் நடிக்கிறேன். இப்போ நடந்துக்கிட்டு இருக்கிற சமூக பிரச்னையைப் பத்தி பேசுற படமா இருக்கும். அதுக்கான ஆரம்பகட்ட பணிகள் போய்க்கிட்டு இருக்கு.”

“சினிமாவைத் தாண்டி இனி வாழ்க்கையில என்ன பண்ணணும்?”
“குடும்பத்தோடு ஜாலியா இருக்கணும். அவ்ளோதான்.”

“கடைசியா ஒரு நாஸ்டால்ஜியா கேள்வி. உங்கப் பெயரை சிரஞ்சீவினு மாத்தினது யார்?”
“என் நிஜ பெயர் சிவசங்கர வரபிரசாத். நான் சினிமாவுக்கு வரணும்னு நினைச்சுக்கிட்டு இருந்த நேரத்துல சிவஷங்கர், ஷங்கர் பாபு, ஷங்கர் பிரசாத்னு நிறைய நடிகர்கள் இருந்தாங்க. அதனால என் பெயரை மாத்தணும்னு நினைச்சேன். ஒரு நாள் யாரோ சிரஞ்சீவினு கூப்பிட, நான் உடனே திரும்பி பார்க்குற மாதிரி கனவு கண்டேன். அப்புறம், சிரஞ்சீவினா என்னன்னு என் அம்மாகிட்ட கேட்டேன். அவங்கதான் இது ஆஞ்சநேயர் பெயர்னு சொன்னாங்க. எனக்கும் பிடிச்சிருந்தது. என் முதல் படம் கமிட்டாகி என்னை மீடியா முன்னாடி அறிமுகப்படுத்தும்போது, ‘என்னை சிரஞ்சீவினு சொல்லி அறிமுகப்படுத்துங்க சார்’னு இயக்குநர்கிட்ட சொன்னேன். அவரும் என்னை அப்படியே அறிமுகப்படுத்தினார். இதுதான் நான் சிரஞ்சீவியான கதை.”

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!