குடும்ப உறவுகளின் மேன்மையை சொல்லும் படம்- பெருநாளி விமர்சனம்


நடிகர் ஜெயன்
நடிகை மதுனிகா
இயக்குனர் சிட்டிசன் மணி
இசை தஷி
ஓளிப்பதிவு ஆர்.குமார்
பெருநாளி கிராமத்தை சேர்ந்த சிவா, பால் வியாபாரம் செய்கிறார். அவரது அக்காவின் மூன்று மகள்களை தனது பிள்ளைகளாக நினைத்து வளர்க்கிறார். சிவாவை அவரது அத்தை மகள் மதுனிகா காதலிக்கிறார். ஆனால் மதுனிகாவின் தந்தை அந்தோணி பழைய பகையால் காதலை எதிர்க்கிறார்.

தொழில் போட்டியால் அதே ஊரை சேர்ந்த கார்த்திக்கும், சிவாவும் அடிக்கடி மோதுகிறார்கள். சிவாவின் அக்காள் மகள் அரசியல்வாதியின் மகனை காதலிக்கிறார். அதேபோல் சிவாவின் தம்பி அரசியல்வாதி மகளை காதலிக்கிறார். இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்யும் சிவா, அரசியல்வாதி வீட்டில் சம்பந்தம் பேசுகிறார்.

வில்லன் கார்த்திக்கும், அவரது தந்தையும் சிவாவை பழிவாங்க திருமணத்தை நிறுத்த முயற்சிக்கிறார்கள். அவர்களின் சூழ்ச்சிகளை முறியடித்து சிவா தனது அக்காள் மகளின் திருமணத்தை முடித்தாரா? முறைப் பெண்ணை கரம் பிடித்தாரா? என்பது மீதிக்கதை.

அறிமுக நாயகனான ஜெயன், சிவா என்கிற கதாபாத்திரத்தில் காதல், குடும்ப உறவு, அதிரடி என கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளார். கதாநாயகி மதுனிகா பக்கத்து வீட்டு பெண் போல நடிப்பை இயல்பாக வெளிப்படுத்துகிறார். நடன காட்சிகள் எடுபடவில்லை. கார்த்திக் வில்லத்தனத்தில் கவனிக்க வைக்கிறார். கிரேன் மனோகர், குணச்சித்திர கதாபாத்திரத்தில் கச்சிதம். அந்தோணி கதாநாயகி தந்தையாக சில காட்சிகளில் வந்தாலும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார்.

சிசர் மனோகர் சிரிக்க வைக்கிறார். தஷி இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். அவரது பின்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்த்துள்ளது. ஆர்.குமாரின் கேமரா காட்சிகளை அழகாக படம் பிடித்துள்ளது. திரைக்கதையை இன்னும் விறுவிறுப்பாக்கி இருக்கலாம். காமெடி, காதல், குடும்ப உறவுகளை மையப்படுத்திய திரைக்கதையை நேர்த்தியாக படமாக்கி உள்ளார். இயக்குனர் சிட்டிசன் மணி.

மொத்தத்தில் ‘பெருநாளி’ விறுவிறுப்பு குறைவு.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.