ஜாம்பியிடம் மாட்டிக் கொண்டவர்கள் எப்படி தப்பித்தார்கள் – ஜாம்பி விமர்சனம்

நடிகர் யோகிபாபு
நடிகை யாஷிகா ஆனந்த்
இயக்குனர் புவன் நல்லன் ஆர்
இசை பிரேம்ஜி
ஓளிப்பதிவு விஷ்ணு ஸ்ரீ
அம்மா மனைவியின் சண்டையில் வாழ்க்கையை வெறுத்த கோபி, மாமியார் மனைவியின் தொல்லை தாங்காமல் இருக்கும் சுதாகர், பிடிக்காத பெண்ணை திருமணம் செய்ய மறுக்கும் அன்பு, ஆகிய நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து மது குடிக்கிறார்கள்

அப்போது மனைவி கொடுமையால் சிக்கி இருக்கும் டி.எம்.கார்த்திக் இவர்களோடு சேர்கிறார். நான்கு பேரும் ஒன்றாக இணைந்து எங்கேயாவது சென்று நிம்மதியாக இருக்கலாம் என்று கிளம்புகிறார்கள். அப்போது வழிப்போக்கனாக பிஜிலி ரமேஷ் இவர்களுடன் ஒட்டிக் கொள்கிறார்.

இவர்கள் அனைவரும் ஈசிஆரில் உள்ள ரெசார்ட்டில் இரவு தங்குகிறார்கள். அங்கு நாயகி யாஷிகா ஆனந்த் மாணவிகளுடன் சுற்றுலா வருகிறார். இந்த ரெசார்ட்டில் இரவு விருந்தில் இறந்து கிடந்த கோழிகளை கொண்டுவந்து ஓட்டல் உணவுகளில் கலந்து பரிமாறுகிறார்கள். இதை உண்பதனால் அனைவரும் ஜாம்பி ஆக மாறுகிறார்கள்.

இந்த உணவை சாப்பிடாமல் இருந்த கோபி, சுதாகர், பிஜிலி ரமேஷ், கார்த்திக், அன்பு, யாஷிகா ஆகியோர் மட்டும் ஜாம்பியாக மாறாமல் இருக்கிறார்கள். இதே இடத்தில் ரவுடியாக இருக்கும் யோகிபாபுவும், இவரை என்கவுண்டர் செய்வதற்காக காத்திருக்கும் ஜான் விஜய்யும் இங்கு வருகிறார்கள். இந்நிலையில், ஜாம்பியாக மாறியவர்களிடம் இருந்து இவர்கள் எப்படி தப்பித்தார்கள் என்பதே படத்தின் மீதிக்கதை.

தமிழ் சினிமாவில் ஜாம்பியை மையமாக வைத்து ஏற்கனவே மிருதன் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. அதை தொடர்ந்து தற்போது ஜாம்பி வெளியாகி இருக்கிறது.

ஜாம்பி திரைப்படத்தை காமெடி கலந்து உருவாக்கி இருக்கிறார்கள். ஆனால், பல இடங்களில் காமெடி காட்சிகள் எடுபடவில்லை. காமெடி என்ற பெயரில் பார்ப்பவர்களை கடுப்பாக்கி இருக்கிறார்கள்.

கோபி, சுதாகர், அன்பு, டி.எம்.கார்த்திக், பிஜிலி ரமேஷ் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். யோகிபாபு காமெடியில் ஓரளவிற்கு கைக்கொடுத்திருக்கிறார். மருத்துவ மாணவியாக வரும் யாஷிகா ஆனந்த் கவர்ச்சியாலும், காமெடியாலும் கவர்ந்திருக்கிறார்.

காமெடியான நடிகர்களை வைத்து காமெடிக்கு பஞ்சம் ஏற்படுத்தி இருக்கிறார் இயக்குனர் புவன் நல்லான். நிறைய லாஜிக் மீறல்கள் படத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. திறமையான நடிகர்களை சரியாக கையாள தெரியாமல் விட்டிருக்கிறார்.

பிரேம்ஜியின் இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. விஷ்ணு ஸ்ரீயின் ஒளிப்பதிவை ரசிக்க முடிகிறது.

மொத்தத்தில் ‘ஜாம்பி’ காமெடி குறைவு.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.