கவுரவர்கள், பாண்டவர்கள் இடையே நடக்கும் போர் – குருஷேத்ரம் விமர்சனம்

நடிகர் அர்ஜுன்
நடிகை சினேகா
இயக்குனர் நாகன்னா
இசை ஹரிகிருஷ்ணா
ஓளிப்பதிவு ஜெய் வின்சென்ட்
மாபெரும் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதம் கவுரவர்கள் மற்றும் பாண்டவர்களின் உறவினர்களுக்கு இடையேயான குருஷேத்ரா போராட்டத்தை விவரிக்கும் விதமாக படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த காவியத்தின் குருஷேத்திர போரினை மையமாக கொண்டு எடுத்திருக்கிறார்கள்.

கவுரவர்களான துரியோதனன், துச்சாதனன், பாண்டவர்கள் தர்மன், பீமன், அர்ஜூனன், நகுலன், சகாதேவன் இவர்களுக்கு இடையே எப்படி குருஷேத்ரம் போர் உருவானது என்பதை படமாக எடுத்திருக்கிறார்கள்.

இதில் துரியோதனன் கதாபாத்திரத்தில் தர்ஷனும், துச்சாதனனாக ரவி சேதான் நடித்திருக்கிறார்கள். பாண்டவர்களில் தர்மன் – சஷி குமார், பீமன் – தனிஷ் அக்தர், அர்ஜூனன் – சோனு சூட், நடித்திருக்கிறார்கள். கர்ணனாக அர்ஜூன் நடிக்க, திரௌபதி ஆக ஸ்நேகாவும் சகுனியாக ரவிசங்கரும் நடித்திருக்கிறார்கள்.

வரலாற்று படங்களை இயக்குவதற்கு தனி தைரியம் வேண்டும். சிறப்பாக கதாபாத்திரங்களை தேர்வு செய்து, அவர்களை திறமையாக கையாண்டிருக்கிறார் இயக்குனர் நாகன்னா. சொல்ல வந்ததை தெளிவாக சொல்லியிருக்கிறார். வரலாற்று படங்களில் முக்கியமானது பிரம்மாண்டம். ஆனால், இந்த படத்தில் பிரம்மாண்டம் இருந்தாலும், கிராபிக்ஸ் காட்சிகள் வரும் அந்த பிரம்மாண்டம் பெரியதாக எடுபடவில்லை. கிராபிக்ஸ் காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

தமிழில் மிகவும் தெரிந்த முகமான அர்ஜூன் மற்றும் சினேகா ஆகியோர் முக்கியமான வேடங்களை ஏற்று நடித்துள்ளனர். இருவரும் அவர்களுக்கான வேலையை கச்சிதமாகவும் அழகாகவும் செய்திருக்கிறார்கள்.

ஹரிகிருஷ்ணாவின் இசையும், ஜெய் வின்சென்ட்டின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. சண்டைக் காட்சிகளை வரலாற்று படங்களுக்கு ஏற்றார்போல் அமைத்திருக்கிறார் கனல் கண்ணன்.

மொத்தத்தில் ‘குருஷேத்ரம்’ பிரம்மாண்டம் குறைவு.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.