துரத்தும் மர்மம், தவிக்கும் நயன்.. கண்ணாமூச்சி ஆடும் கொலையுதிர் காலம் விமர்சனம்

நடிகர் நடிகர் இல்லை
நடிகை நயன்தாரா
இயக்குனர் சக்ரி டோலட்டி
இசை அச்சு ராஜாமணி
ஓளிப்பதிவு கோரி கெர்யக்
நாயகி நயன்தாரா சிறு வயதில் ஆசிரமத்தில் வளர்கிறார். இவரால் பேசவும், கேட்கவும் முடியாது. ஆனால், இவர் திறமையாக ஓவியம் வரையக்கூடியவர். ஆசிரமத்தின் உரிமையாளர் லண்டனில் இருந்து தமிழ்நாட்டிற்கு வர, அவரை இதுவரை பார்த்திராத நயன்தாரா அப்படியே ஓவியமாக வரைந்து வைத்திருக்கிறார்.

இதைப் பார்க்கும் ஆசிரமத்தின் உரிமையாளர் நயன்தாராவை வளர்ப்பு மகளாக தத்தெடுத்து கொள்கிறார். ஆசிரமத்தின் உரிமையாளர் உயிரிழக்கும் நிலையில், லண்டனில் இருக்கும் சொத்துக்களை வளர்ப்பு மகள் நயன்தாராவிற்கு எழுதி வைத்துவிடுகிறார்.

லண்டனுக்கு செல்லும் நயன்தாராவிடம், ஆசிரம உரிமையாளரின் உறவினர்களான பூமிகா மற்றும் அவரது கணவர், இது எங்களுக்கு சொந்தமான சொத்து என்று முறையிட்டு சொத்தை அபகரிக்க நினைக்கிறார்கள். இந்நிலையில், மர்ம நபர் ஒருவர் நயன்தாராவை கொலை செய்ய முயற்சி செய்கிறார்.

இறுதியில் அந்த மர்ம நபர் யார்? எதற்காக நயன்தாராவை கொலை செய்ய முயற்சி செய்கிறார்? பூமிகா மற்றும் அவரது கணவரின் எண்ணம் நிறைவேறியதா? இதிலிருந்து நயன்தாரா எப்படி மீண்டார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

நயன்தாரா தனக்கே உரிய பாணியில் அசத்தி நடித்திருக்கிறார். வாய் பேச முடியாமல், காது கேட்காமல் இவர் செய்யும் செய்கைகள் பல இடங்களில் ரசிக்கவும், சில இடங்களில் பரிதவிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இவரை மையமாக வைத்தே இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. கதாபாத்திரத்தை உணர்ந்து நயன்தாரா திறமையாக நடித்திருக்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பின் திரையில் தோன்றிருக்கும் பூமிகாவின் நடிப்பு ரசிக்க வைத்திருக்கிறது. சொத்துக்காக நயன்தாராவை பழி வாங்குவது என வில்லத்தனத்தில் கவனம் பெற்றிருக்கிறார்.

மர்மம் கலந்த திரில்லர் பாணியில் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சக்ரி டோலட்டி. நயன்தாராவிடம் பாசம், அன்பு, கோபம், பயம் என திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். ஆனால், திரைக்கதையில் கவனத்தை தவறவிட்டிருக்கிறார். பல லாஜிக் மீறல்கள் படத்திற்கு பலவீனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு வீட்டிற்குள் மர்ம நபர், நயன்தாரா இருவரும் ஓடி பிடித்து விளையாடுவது போல் திரைக்கதை இருக்கிறது. இது ஒரு கட்டத்திற்கு மேல் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அச்சு ராஜாமணியின் பின்னணி இசையை மட்டுமே வைத்து படத்தை நகர்த்தி இருக்கிறார்கள். கோரி கெர்யக் ஒளிப்பதிவு சிறப்பு.

மொத்தத்தில் ‘கொலையுதிர் காலம்’ இறந்த காலம்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.