திருட்டு வேட்டைகாரன் – கழுகு 2 விமர்சனம்

நடிகர் கிருஷ்ணா
நடிகை பிந்து மாதவி
இயக்குனர் சத்யசிவா
இசை யுவன் சங்கர் ராஜா
ஓளிப்பதிவு ராஜா பட்டாச்சாரி

கொடைக்கானலில் எஸ்டேட் முதலாளியிடம் உதவியாளராக வேலை பார்க்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். அந்த பகுதியில் செந்நாய்கள் கூட்டமாக வந்து எஸ்டேட்டில் வேலை செய்யும் ஆட்களை கடித்துக் கொல்வதால், மக்கள் யாரும் வேலைக்கு வருவதில்லை. இம்மாதிரியான சூழ்நிலையில் செந்நாய்கள் தாக்குதலை கட்டுப்படுத்த வேட்டை ஆட்களை பணியமர்த்த முடிவு செய்கின்றனர். இதற்காக வேட்டை ஆட்களை தேடி தேனிக்கு செல்கிறார் எம் எஸ் பாஸ்கர்.

செல்லும் வழியில் கிருஷ்ணா, காளி வெங்கட் இருவரும் துப்பாக்கியுடன் ஓடுவதைப் பார்த்த எம்எஸ் பாஸ்கர் இவர்கள் இருவரும் பெரிய வேட்டைக்காரர்கள் என்று நினைத்துக் கொள்கிறார். ஆனால் இவர்கள் இருவரும் திருடர்கள் என்பதும், போலீஸ் துப்பாக்கியை திருடிவிட்டு ஓடுவதும் அவருக்கு தெரியாது.

அவர்களிடம் சென்று தங்குமிடம், சாப்பாடு, நல்ல சம்பளம் தருவதாக கூறி வேலைக்கு அழைக்கிறார் எம்எஸ் பாஸ்கர். அவர்களும் போலீசிடம் இருந்து தப்பிக்க இதுவே நல்ல வழி என்று திருடிய துப்பாக்கியோடு வேலைக்குச் செல்கிறார்கள். இவர்கள் இருவரும் வேட்டைகாரர்கள் என நம்பி, அப்பகுதி மக்களும் வேலைக்கு வருகிறார்கள். எம்எஸ் பாஸ்கரின் மகள் பிந்து மாதவியும் அங்கு வேலைக்கு வருகிறார்.

ஒரு கட்டத்தில் பிந்து மாதவி செந்நாய்களிடம் தனியாக மாட்டிக் கொள்கிறார். துப்பாக்கியால் சுடவே தெரியாத கிருஷ்ணா ஒருவழியாக செந்நாயை கொன்று பிந்து மாதவியை காப்பாற்றுகிறார். பின்னர் இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். இதற்கு எம் எஸ் பாஸ்கர் எதிர்ப்பு தெரிவிக்கிறார். இது ஒருபுறம் நடக்க, ஏதாவது பெரிய திருட்டு செய்துவிட்டு நாயகியுடன் சந்தோஷமாக வாழலாம் என்று திட்டம் தீட்டுகிறார் கிருஷ்ணா. இறுதியில் நாயகன் திருடி செட்டில் ஆனாரா? நாயகியுடன் ஒன்று சேர்ந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தின் நாயகனாக நடித்த கிருஷ்ணா, கழுகு முதல் பாகத்தில் பார்த்த அதே தோற்றத்தோடு தோன்றி நடிப்பில் மிளிர்கிறார். காதல், நட்பு, ஆக்‌ஷன் என அனைத்திலும் எதார்த்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார் கிருஷ்ணா. நாயகி பிந்துமாதவி, காட்சிகளுக்கு அழகாக வந்து, தனது கேரக்டரை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாகவே தென்படுகிறார்.

கழுகு படத்தை இயக்கிய சத்ய சிவா தான் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். கழுகு படத்தின் தொடர்ச்சியாக இப்படத்தின் கதை அமைக்கப்படவில்லை. முழுமையாக வேறு கதைகளத்தில் படத்தை நகர்த்தியுள்ளார். திரைக்கதையில் ஒருசில இடங்களில் தொய்வு ஏற்படுகிறது. படம் முழுவதும் அடர்ந்த காட்டுக்குள் எடுக்கப்பட்டுள்ளது. காட்டின் எழில்மிகு அழகையும், மலைவாழ் மக்களின் வாழ்வியலையும் சிறப்பாக காட்சிப்படுத்தி உள்ளார் இயக்குனர்.

படம்முழுக்க கிருஷ்ணாவுடன் பயணிக்கும் காளி வெங்கட் தனது டைமிங் காமெடி மூலம் ஆங்காங்கே சிரிக்க வைத்தாலும், ஒரு குணச்சித்திர கதாபாத்திரமாகவே வருகிறார். அதுவும் ரசிக்கும்படியாகவே இருந்தது. எம்.எஸ். பாஸ்கர் எதார்த்தமான நடிப்பால் கவர்கிறார். யுவன்சங்கர் ராஜாவின் மிரட்டலான பின்னனி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. ஆனால் பாடல்கள் மனதில் பதியும்படி இல்லாவிட்டாலும் படத்தோடு ஒன்றி போகிறது. கொடைக்கானலின் அழகை தனது நேர்த்தியான ஒளிப்பதிவு மூலம் கண்முன் நிறுத்தியிருக்கிறார் ராஜா பட்டாச்சாரி.

மொத்தத்தில் ‘கழுகு 2’ கரடுமுரடான மலை பயணம்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்