குரு உச்சத்துல இருக்காரு – சினிமா விமர்சனம்


பட்டதாரியான நாயகன் குரு ஜீவா வேலைக்கு ஏதும் போகாமல், ஜாலியாக ஊரை சுற்றி வருகிறார். இவரது அப்பா எந்த வேலைக்கும் போகாததால், இவரும் அதே வழியில் பின் பற்றி வருகிறார். ஊர் தலைவரின் பெண்ணான நாயகி ஆராவை ஒரு தலையாக காதலித்து வருகிறார். இவரை சந்திப்பதற்காக ஊரில் ஏதாவது ஒரு பிரச்சனையை கொண்டு ஊர் தலைவர் வீட்டுக்கு சென்று வருகிறார். ஒரு கட்டத்தில் ஆராவிற்கு குரு ஜீவாவின் காதலை ஏற்று இருவரும் காதலித்து வருகிறார்கள்.

இந்நிலையில், குரு ஜீவாவின் நண்பரின் பாட்டி இறந்து விடுகிறார். இவரை நல்லடக்கம் செய்ய பணம் இல்லாமல் தவிக்கிறார்கள். அப்போது ஊர் மக்கள் அனைவரும் பணத்தை திரட்டி அவர்களிடம் கொடுத்து விட்டு, இனிமேலாவது பணம் சம்பாரிக்க முயற்ச்சி செய்யுங்கள் என்று அறிவுறை கூறுகிறார்கள்.


இதே சமயம், ஊரின் எம்.பி.யாக இருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் மிகவும் நேர்மையானவர். எந்த ஊழலும் செய்யாதவர் என்று மக்களை நம்பவைத்து வருகிறார். ஆனால், 100 கோடி ரூபாய் பணத்தை யாருக்கும் தெரியாமல் தன் டிரைவரிடம் கொடுத்து காட்டுக்குள் பதுக்கி வைக்க சொல்கிறார். பணத்தை மறைத்து வைத்த டிரைவர் எதிர்பாராத விதமாக இறந்து விடுகிறார்.

பணம் இருக்கும் விஷயம் அறிந்த குரு ஜீவா, தன் ஊரில் இருக்கும் பாண்டியராஜன், இமான் அண்ணாச்சி மற்றும் நண்பர் ஆகியோரை அழைத்துக் கொண்டு காட்டுக்குள் செல்கிறார். எம்.பி.யான எம்.எஸ்.பாஸ்கரும் பணத்தை தேடி செல்கிறார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

இறுதியில் அந்த பணம் யாருக்கு கிடைத்தது? குரு ஜீவாவும் ஆராவும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் குரு ஜீவா, தன்னால் முடிந்த வரை நடிப்பால் ரசிகர்களை கவர முயற்சித்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ஆரா, அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் பாண்டியராஜனின் நடிப்பு ரசிக்க வைக்கிறது. அதுபோல், இமான் அண்ணாச்சி, எம்.பியாக வரும் எம்.எஸ்.பாஸ்கர், எதிர்கட்சியை சேர்ந்த நமோ நாராயணன் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.


பணம் மட்டுமே மூலக்கதையாக வைத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் தண்டபாணி. இதில் காதல், காமெடி கலந்து திரைக்கதை அமைத்திருக்கிறார். ஆனால், இந்த திரைக்கதை ஒரு சில இடங்களில் தொய்வை ஏற்படுத்தி இருக்கிறது. பாண்டியராஜனை இன்னும் அதிகமாக உபயோகப்படுத்தி இருக்கலாம். காட்டுக்குள் லொகேஷன்களை சிறப்பாக தேர்வு செய்திருக்கிறார்.

தாஜ் நூர் இசையில் பாடல் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்கலாம். தளபதி குரேசியின் ஒளிப்பதிவு காட்டுப்பகுதியை அழகாக படம் பிடித்திருக்கிறது.

மொத்தத்தில் ‘குரு உச்சத்துல இருக்காரு’ சுமாரா இருக்காரு.

Source: Maalaimalar

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!