தந்தையின் ஆசையை நிறைவேற்ற துடிக்கும் மகன்- வெண்ணிலா கபடி குழு 2 விமர்சனம்

நடிகர் விக்ராந்த்
நடிகை அர்த்தனா
இயக்குனர் செல்வசேகரன்
இசை செல்வகணேஷ்
ஓளிப்பதிவு கிருஷ்ணசாமி
80100
1989-ல் நடக்கக்கூடிய கதையாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில், நாயகன் விக்ராந்த் சொந்தமாக ஆடியோ கடை வைத்திருக்கிறார். விக்ராந்த்தின் தந்தை பசுபதி அரசு பஸ் டிரைவராக இருக்கிறார். இவருக்கு கபடி மீது அலாதி பிரியம். இது விக்ராந்த்துக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இது போன்ற சூழலில் பக்கத்து ஊரைச் சேர்ந்த நாயகியை பார்த்தவுடனே காதலிக்க ஆரம்பித்துவிடுகிறார் விக்ராந்த்.

நாயகியின் தந்தை ரவி மரியா மிகவும் அன்பாக பார்த்துக் கொள்கிறார். மகள் காதலிப்பது தெரியவர, விக்ராந்த்தை கொள்வதற்கு ஆள் அனுப்புகிறார் ரவி மரியா. விக்ராந்த்தை கொல்ல வந்தவர்களை அடித்து துவம்சம் செய்து தந்தை பசுபதி மகனை மீட்டு செல்கிறார். இதையடுத்து தான் விக்ராந்த் தனது தந்தையின் மதிப்பை உணர்கிறார்.

தந்தை பசுபதி ஒரு முன்னாள் கபடி வீரர் என்பதை தனது அம்மா மூலம் தெரிந்து கொள்ளும் விக்ராந்த். தன்னை கபடியில் சிறந்த வீரனாக ஆக்க வேண்டும் என்ற தந்தையின் ஆசையை நிறைவேற்ற முடிவு செய்கிறார் விக்ராந்த். விக்ராந்தை சென்னைக்கு அனுப்பி வைக்கிறார் பசுபதி.

ஆனால் விக்ராந்த் சென்னைக்கு போகாமல் பசுபதியின் சொந்த ஊரான கணக்கன்பட்டிக்கு செல்கிறார். அங்கு பிரிந்து கிடக்கும் வெண்ணிலா கபடிக் குழுவினரை ஒன்றிணைத்து அவர்களிடம் இருந்து கபடி விளையாட கற்றுக்கொள்கிறார். இறுதியில் தந்தை வெற்றி பெற நினைத்த அணியை நாயகன் மோதி வெற்றி பெற்றாரா? நாயகியுடன் ஒன்று சேர்ந்தாரா? என்பது மீதி கதை

முதல்பாதியில் குடும்பம், காதல் என சுற்றி வரும் இளைஞனாகவும், பிற்பாதியில் தந்தையின் ஆசையை நிறைவேற்ற தீவிரமாக பயிற்சி எடுத்து கபடி விளையாடுவது என சிறப்பாக நடித்துள்ளார் விக்ராந்த். நாயகிக்கு பெரும் பங்கு இல்லாத போதும், வரும் காட்சிகளில் அழகால் ரசிக்க வைக்கிறார்.

படத்தின் இரண்டாம் பாதியில் வரும் சூரி ஒரளவு காமெடி செய்ய முயன்றிருக்கிறார். ஆனால் முதல் பாகத்தை போன்று காமெடி இப்படத்தில் இல்லை. நாயகனின் தந்தையாக வரும் பசுபதி எதார்த்தமாக நடித்து மனதில் நிற்கிறார். குறிப்பாக தந்தை மகனுக்கு இடையிலான சென்டிமென்ட் மிக நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். மற்றபடி படத்தில் ரவிமரியா அப்புகுட்டி என அனைவரும் அவரவர் கதாப்பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

வெண்ணிலா கபடிக்குழு படம் கொஞ்சம் நீளமாக இருப்பது போல் தோன்றுகிறது. இயக்குனர் செல்வசேகரன் திரைக்கதையை சற்று மெருகேற்றி இருந்தால், படம் இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும். 80களில் நடக்கும் கதை என்பதால் அதற்கு ஏற்றார் போல் இசையமைத்திருக்கிறார் இசையமைப்பாளர் செல்வகணேஷ். ஒளிப்பதிவாளர் கிருஷ்ணசாமியின் கேமரா படத்திற்கு பலம் சேர்க்கிறது.

மொத்தத்தில் ’வெண்ணிலா கபடி குழு 2’ கலகலப்பில்லாத கபடிக்குழு


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.