போதை தவறான பாதை- போதை ஏறி புத்தி மாறி விமர்சனம்

நடிகர் தீரஜ்
நடிகை துஷாரா
இயக்குனர் கே.ஆர்.சந்துரு
இசை கே.பி.
ஓளிப்பதிவு பாலசுப்பிரமணியம்

ஹீரோ தீரஜிற்கும் ஹீரோயின் துஷாராவிற்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. திருமணத்திற்கு முந்தைய நாள் பேச்சிலர் பார்ட்டி கொடுக்க நண்பனின் வீட்டிற்கு செல்கிறார் தீரஜ். குடிப்பழக்கம் இல்லாத தீரஜிடம், போதை மருந்து குறித்து நண்பன் ஒருவன் விளக்குகிறான். அப்போது துஷாராவை வெறுப்பேற்றும் நோக்கில் நண்பனிடம் போதை மருந்தை வாங்கி போட்டோ எடுக்க முயல்கிறார் தீரஜ். எதிர்பாராத விதமாக போதை மருந்தை எடுத்து கொள்கிறான்.

இன்னொரு புறம், போதை மருந்து கடத்தல் தொடர்பாக பத்திரிக்கை நிருபர் பிரதாயினி சுர்வா செய்திகளை சேகரித்து வருகிறார். இதனை அறிந்த கடத்தல் கும்பலும் போலீசின் உதவியுடன் போதை மருந்து பற்றி எழுதும் பத்திரிக்கை நிருபரை மிரட்டி வழிக்கு கொண்டுவர பார்க்கிறார்கள். இந்த இரண்டு கதையும் கடைசியில் ஓரிடத்தில் இணைகிறது. போதை ஒருவரது வாழ்க்கையை எந்த அளவு பாதிக்கிறது? என்பதே மீதிக்கதை.

தீரஜ் அறிமுக நாயகன். அப்பாவி முகத்தோற்றம் கொண்ட கதாபாத்திரத்திற்கு அலட்டல் இல்லாமல் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படத்தின் பெரும்பகுதியில் வந்துள்ள இவர், அறிமுக நாயகன் என்ற பதற்றமின்றி நடித்துள்ளார். துஷாரா, பிராதாயினி இருவரும் படத்தில் 10 முதல் 15 நிமிடங்களே வந்தாளும் அழகால் ஈர்க்கின்றனர்.

சந்துரு இயக்கத்தில் முதல் படம். தனித்துவமான திரைக்கதையை தேர்ந்தேடுத்து, அதை சரியாக செய்தும் முடித்திருக்கிறார். முதல் படத்திலேயே பல்வேறு திருப்பங்களுடன் திரைக்கதையை உருவாக்கி வெற்றி கண்டுள்ளார்.

படத்தின் பெரும்பகுதி ஒரு வீட்டிற்குள் நடக்கிறது. ஆனால் ஒவ்வொரு பிரேமிலும் வித்தியாசம் காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம். சில ஸ்பெஷல் எபெக்ட்களை கேமராவிலேயே செய்து காட்டி கண்களுக்கு விருந்தளிக்கிறார். கே.பி.யின் பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

மொத்தத்தில் ’போதை ஏறி புத்தி மாறி’ நல்ல முயற்சி.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.