காட்டுக்குள் சிக்கிக் கொண்ட இளைஞர்கள் – தும்பா விமர்சனம்

நடிகர் தர்ஷன்
நடிகை கீர்த்தி பாண்டியன்
இயக்குனர் ஹரிஷ் ராம்
இசை சந்தோஷ் தயாநிதி
ஓளிப்பதிவு நரேன் இளன்
நாயகன் தர்‌ஷன் பல வேலைகள் பார்க்கும் துடிதுடிப்பான இளைஞர். கவனக்குறைவால் பெட்ரோல் பங்க் வேலை பறிபோகிறது. இவரது நண்பர் தீனாவுக்கு காட்டில் புலி சிலைகளுக்கு பெயிண்ட் அடிக்கும் ஒப்பந்தம் கிடைக்கிறது. வேலை இல்லாமல் இருக்கும் தர்‌ஷன் பணத்துக்காக தீனாவுடன் பெயிண்ட் அடிக்க காட்டுக்குள் செல்கிறார்.

இன்னொரு பக்கம் நாயகி கீர்த்தி காட்டில் வனவிலங்குகளை படம் பிடிக்க ஆவலுடன் வருகிறார். இதற்கிடையே கேரளாவில் ஒரு காட்டில் இருந்து தும்பா என்ற புலி தப்பித்து தமிழ்நாடு காட்டுக்குள் வருகிறது. அதை சட்டவிரோதமாக பிடித்து விற்க வன அதிகாரி திட்டமிடுகிறார்.

காட்டுக்குள் தர்ஷனுக்கு கீர்த்தியுடன் பழக்கம் ஏற்படுகிறது. கீர்த்தியின் வேண்டுகோளுக்காக அந்த புலியை தேடி தர்‌ஷனும் தீனாவும் செல்கிறார்கள். இறுதியில் கீர்த்தி அந்த புலியை படம் பிடித்தாரா? வன அதிகாரி அந்த புலியை சட்ட விரோதமாக விற்றாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

தர்‌ஷனுக்கு இது இரண்டாவது படம். முடிந்தவரை நடிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் எல்லா சூழ்நிலைகளுக்கும் ஒரே மாதிரியான முகபாவனை. முகத்தில் குழந்தைத்தனம் நிறைய தெரிகிறது. இவற்றை மாற்றிக்கொண்டால் கதாநாயகனாக ஒரு சுற்று வரலாம்.

தீனா படம் முழுக்க வருகிறார். சில இடங்களில் மட்டும் அவரது காமெடிக்கு சிரிப்பு வருகிறது. கீர்த்திக்கு இது அறிமுக படம். படம் முழுக்க டவுசரிலேயே வருகிறார். அவருக்கு கவர்ச்சி செட் ஆகவில்லை. தர்‌ஷன், தீனாவை திட்டும் இடங்களிலும் புலிக்குட்டியை பொத்தி காப்பாற்றும் இடத்திலும் கவனிக்க வைக்கிறார். ஜெயம் ரவி ஒரு பாடலுக்கு மட்டும் வந்து போகிறார்.

நரேன் இளனின் ஒளிப்பதிவு படத்துக்கு பெரிய பலம். காட்டின் அழகையும் குளுமையையும் அழகாக படம் பிடித்துள்ளது. கதை, திரைக்கதையில் புதிதாக எதுவும் இல்லாவிட்டாலும் நரேனின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது. அனிருத், விவேக் மெர்வின், சந்தோஷ் தயாநிதி என 3 இசையமைப்பாளர்கள். பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்கும் ரகம்.

வனவிலங்குகளை மையமாக வைத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஹரிஷ் ராம். சுவாரசியமான திரைக்கதை வசனம் அமைத்து இருந்தால் குழந்தைகள், குடும்பங்களுக்கு ஏற்ற பொழுதுபோக்கு படமாக இருந்து இருக்கும். இருந்தாலும் விசுவலாக படம் நம்மை கவர்கிறது. புலி, குரங்கு, யானை என்று கிராபிக்ஸ் மூலம் விலங்குகளை உருவாக்கி இருக்கிறார்கள். புலி வரும் காட்சிகளில் நம்பகத்தன்மை இருக்கிறது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.