நாட்டுப்புற கலைஞர் ஹரிஷ் குமார் உள்பட 4 பேர் கார் விபத்தில் பலி!

ராஜஸ்தான் மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற நாட்டுப்புற நடன கலைஞரான ஹரிஷ் குமார் உள்பட 4 பேர் கார் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் பகுதியைச் சேர்ந்தவர் நாட்டுப்புற கலைஞர் ஹரிஷ் குமார். இவர், குயீன் ஹரிஷ் மற்றும் கூமார், கல்பேலியா, ஷாங், பாவை, சாரி ஆகிய நாட்டுப்புற ஷோக்கள் மூலம் உலகம் முழுவதும் அறியப்பட்ட கலைஞராக திகழ்ந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, ஜெய்சால்மர் பகுதியிலிருந்து அஜ்மீர் பகுதிக்கு எஸ்யூவி காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, கார் ஜோத்பூர் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது கபர்தா கிராமத்திற்கு அருகில் கனரக வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், ஹரிஷ் குமார் மற்றும் அவருடன் சென்ற ரவீந்திரா, பீகே கான், லதீப் கான் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும், 5 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பிலாரா காவல் நிலைய அதிகார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில், ஹரீஷ் மற்றும் அவரது குழுவைச் சேர்ந்தவர்கள் நடன நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்த போது, விபத்து ஏற்பட்டு பலியாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கார் விபத்தில் பலியான நாட்டுப்புற கலைஞர் ஹரீஷ் பலியான சம்பவம் குறித்து ராஜஸ்தான் மாநில முதல்வர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், ஹரிஷின் விதவிதமான நடன கலையால் ஜெய்சால்மரில் தனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கினார். அவரது இறப்பு நாட்டுப்புற கலைக்கு பெரிய இழப்பு என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.