நதிநீர் பிரச்சனைக்கு போராடும் இளைஞன் – பூமராங் விமர்சனம்

நடிகர் அதர்வா முரளி
நடிகை மேகா ஆகாஷ்
இயக்குனர் கண்ணன்
இசை ரதன்
ஓளிப்பதிவு பிரசன்னா எஸ் சுகுமார்
71100
படம் ஆரம்பத்தில் தீயில் சிக்கி முகம் முழுவதும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் ஒருவர் அனுமதிக்கப்படுகிறார். அவரது முகத்தையே கண்ணாடியில் பார்க்க முடியாமல் உடைந்து போகிறார். அந்தளவிற்கு அவரது முகம் சிதைந்து போகிறது. அதன்பின் முகம் மாற்று அறுவைசிகிச்சை செய்யலாம் என மருத்துவர் கூற, அதற்கு ஒப்புக்கொண்டு மூளை சாவடைந்த நிலையில் இருக்கும் அதர்வாவின் முகத்தை எடுத்து அவருக்கு வைக்கின்றனர்.

ஒரு குறும்படம் இயக்குவதன் மூலம் நாயகி மேகா ஆகாஷுக்கும் அதர்வாவிற்கும் பழக்கம் ஏற்படுகிறது. இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறுகிறது. இந்நிலையில், ஒரு நாள் அதர்வாவை கொலை செய்ய முயற்சிகள் நடைபெறுகிறது. தன்னுடைய புதிய முகம் தான் இந்த கொலை முயற்சிகளுக்கு காரணம் என அறிந்து, அந்த முகத்திற்கு சொந்தக்காரர் உண்மையில் யார் என அறிய தேடி செல்கிறார் அதர்வா.

இறுதியில் அந்த முகத்திற்கு சொந்தக்காரர் யார்? அவரை கொலை செய்ய முயற்சி செய்தது யார்? அதன் பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் அதர்வா, துறுதுறு இளைஞனாக நடித்திருக்கிறார். காதல், நடனம், ஆக்‌ஷன் காட்சிகளில் திறமையான உழைப்பை கொடுத்திருக்கிறார். கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார்.

முதல் நாயகியாக நடித்திருக்கும் மேகா ஆகாஷ் அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் இந்துஜா கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். முதற்பாதியில் சதீஷ் காமெடியும், பிற்பாதியில் ஆர்ஜே பாலாஜியின் காமெடியும் திரையின் ஓட்டத்திற்கு கைக்கொடுத்திருக்கிறது.

விவசாயத்தை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஆர்.கண்ணன். நதிநீர் இணைத்தால் வறண்ட இடங்களையும் விவசாயம் செழிக்கும் என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறார். முதல்பாதி வேகமாகவும், பிற்பாதி மெதுவாகவும் திரைக்கதை நகர்த்திருக்கிறார். ஒரு சில இடங்களில் மற்ற படத்தின் ஞாபகம் வந்து செல்கிறது. நம் நாட்டில் நடந்த பல விஷயங்களை பற்றி ஆங்காங்கே வரும் காட்சிகள் மற்றும் வசனங்களுக்கு படத்திற்கு பிளஸாக அமைந்திருக்கிறது. கதாபாத்திரங்களிடையே நன்றாக வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர்.

ரதன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் சிறப்பாக கொடுத்திருக்கிறார். பிரசன்னா எஸ் சுகுமாரின் ஒளிப்பதிவு, முற்பகுதி நகரத்தையும், பிற்பகுதி கிராமத்தையும் அழகாக படம்பிடித்திருக்கிறது.

மொத்தத்தில் ‘பூமராங்’ சமூக அக்கறை.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.