27 வருடங்களுக்குப் பிறகு ‘தேவர்மகன்’ வீட்டில் கமல்! – வைரல் புகைப்படங்கள்

நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கடந்த வருடம் ’தேவர் மகன் – 2’, இந்தியன் -2 ஆகிய படங்களை எடுக்கும் திட்டம் இருப்பதாகத் தெரிவித்தார். அதன் பிறகு அரசியல் பணிகளில் தீவிரம் காட்டிய அவர் சினிமாவில் இருந்து சற்று விலகி முழு நேர அரசியல்வாதியாகச் செயல்பட்டு வருகிறார்.

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவடங்களுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்கள் கருத்தை கேட்டு வருகிறார். சமீபத்தில் கமல் அளித்த பேட்டியில், ‘ சங்கர் இயக்கத்தில் தான் நடிக்கவுள்ள இந்தியன் -2 தான் தனக்கு கடைசி படம் என்றும் அதை முடித்துவிட்டு முழு நேரமாக அரசியலில் ஈடுபடப்போவதாக’ அறிவித்தார். அவர் கூறியது போல இந்தியன் – 2 படத்துக்கான பூஜைகள் தொடங்கி விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

இதற்கிடையில், பொங்கல் பண்டிகையின் போது கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு சென்றிருந்த கமல், தேவர் மகன் படம் எடுக்கப்பட்ட ‘சிங்காநல்லூர் அரண்மனைக்கு’ செல்ல வேண்டும் என விரும்பியுள்ளார். ஆனால் நேரம் இல்லாததால் அங்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது மீண்டும் பொள்ளாச்சி சென்றுள்ள அவர், தேவர் மகன் எடுத்த அந்த அரண்மனைக்குச் சென்றுள்ளார். 27 வருடங்களுக்குப் பிறகு அந்த இடத்தை தன் கட்சிக்காரர்களுடன் சுற்றிப்பார்த்துள்ளார்.

பின்னர் அந்தப் படம் உருவாக்கப்பட்டபோது நடிகர் சிவாஜியுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்தும் படம் பற்றிய பழைய நினைவுகள் குறித்தும் கட்சி நிர்வாகிகளிடம் பேசி சிலாகித்துள்ளார். கமலின் இந்தப் புகைப்படங்கள் வெளியான பிறகு ’தேவர் மகன் 2’ உருவாகவுள்ளதாகத் தகவல்கள் பரவின. ஆனால் இந்த செய்தி மறுக்கப்பட்டுள்ளது. இருந்தும் அந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.