இதைமட்டும் செய்யவே மாட்டேன் – அறம் இயக்குனர்


சமீபத்தில் நயன்தாராவின் துணிச்சலான நடிப்பில் வெளியாகி அனைவரின் பாராட்டை பெற்ற படம் அறம். இந்த பாராட்டுதலுக்கு ஒட்டு மொத்த சொந்தக்காரர் இயக்குநர் கோபி நயினார் தான். படம் பாராட்டுகளை பெற்றாலும் மிகுந்த மன வேதனையில் இருக்கிறார் இயக்குநர். சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கோபி நயினார்…

ஆழ்துளை கிணற்றில் பல குழந்தைகள் தவறி விழுவதை டிவிக்களில் பார்த்து தான் அறம் கதையை எழுதினேன். இந்தப்படத்தை நயன்தாரா தயாரிப்பார் என்று தான் அவரிடம் கதை சொன்னேன், ஆனால் அவரே நடிப்பார் என எதிர்பார்க்கவில்லை. அதனால் வசனங்களை கொஞ்சம் வீரியமாக எழுதினேன்.


என்ன நயன்தாரா ஹீரோயிசம் பண்ணுகிறார் என்று பலர் கேட்டனர், எத்தனை நாளைக்கு தான் நடிகர்கள் ஹீரோயிசம் பண்ணுவது, ஹீரோயின்கள் நடிக்கட்டும் என்று சொன்னேன். இங்கு யாரும் கிளாமர் நடிகைகள் கிடையாது. ஆனால் அவர்கள் அப்படி நடிக்க வற்புறுத்தப்படுகிறார்கள். நிறைய ஐஏஎஸ்., அதிகாரிகள், ஓய்வு பெற்ற அரசியல் தலைவர்கள் அறம் படத்தை பாராட்டினார்கள்.

இப்படி ஒரு தரமான படத்தை கொடுத்த என்னால் அந்த வெற்றியை கொண்டாட முடியவில்லை. நள்ளிரவில் போன் செய்து என் குடும்ப பெண்களை எல்லாம் இழுத்து தவறான வார்த்தைகளை சொல்லி திட்டுகிறார்கள். இதனால் நான் மிகுந்த மனவேதனையில் உள்ளேன்.

எதுவாக இருந்தாலும் நான் நேரடியாக அமர்ந்து விவாதம் செய்ய தயாராக உள்ளேன். ஆனால் அப்படி இல்லாமல் சமூக வலைதளங்களில் என்னை சாடுகிறார்கள். தொடர்ந்து நான் நம்முடைய பிரச்னைகளுக்கான விஷயங்களை தான் படமாக்க போகிறேன். ஒருவேளை எனக்கு சினிமாவில் வாய்ப்பே கிடைக்காவிட்டால் வாட்ச்மேன் வேலைக்கு கூட போவேனே தவிர மசாலா கதைகளுக்கு நான் செல்லமாட்டேன்.இவ்வாறு அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி