சினிமாவுக்கு வருவதற்கு முதல் நடிகர் ஸ்ரீகாந்த் என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா..?


நான் மாடலிங் செய்து வந்தேன். என் படத்தை பார்த்து விட்டு ரோஜாக்கூட்டம் திரைப்படத்திற்கு அழைப்பு வந்தது. ஆனா அந்த கேரக்டருக்கு ஏற்ற வயது எனக்கு இருக்கவில்லை. பின்னர் 2 வருடத்திற்கு பிறகு ரோஜாக்கூட்டம் படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபல்யமானேன்.

ரோஜாக்கூட்டம், ஏப்ரல் மாதத்தில் என ஆரம்பத்தில் வெற்றிப் படங்களை தந்த நீங்கள் சில காலம் அவ்வளவு ஜொலிக்கவில்லையே?

நான் வெற்றிகளையும் பார்த்து இருக்கிறேன். ஒரு கட்டத்திற்கு பிறகு தோல்விகளையும் பார்த்திருக்கிறேன். தவறுகளை திருத்திக் கொண்டால் வாழ்க்கையில முன்னேற வழி கிடைக்கும். நான் தோல்விகளிலிருந்து நிறைய பாடம் கற்றுக் கொண்டேன்.

நண்பன் படத்தில் விஜய், ஜீவாவுடன் இணைந்து நடித்த அனுபவம் எப்படியிருந்தது?

ஜீவா நான் சினிமாவுக்கு வந்த போது வந்த நடிகர் ஆனால் விஜய் என்னைவிட மூத்தவர். என்னுடைய நெருங்கிய நண்பர். எல்லோரிடமும் ரொம்ப யதார்த்தமாக பழகக்கூடிய ஒருவர். ரொம்ப அனுபவசாலி. அவருடைய வார்த்தைகளும் ரொம்ப கவனமாக இருக்கும். நண்பன் படம் மூலமாக நான் விஜயிடம் நிறைய கற்றுக் கொண்டேன்.


கல்லூரி மாணவனாக அதிகமான படங்களில் நடித்துள்ளீர்கள் அது பற்றி?

இடையில் எனது வயதுக்கு மீறிய கதைகளிலும் நடித்திருந்தேன். நான் இந்த வயசில ஒரு கல்லூரி மாணவனா நடிக்கலனா பிறகு நடிக்க முடியாது. அந்த வாய்ப்பை நான் சரியாக பயன்படுத்த வேண்டுமென்று கல்லூரி மாணவன் கதைகள் வந்ததால் நடித்தேன்.

கதைகள் தெரிவு செய்யும் போது எவ்வாறான விடயங்களில் கவனம் செலுத்துவீர்கள்?

நான் ஏற்கனவே நடித்த படங்களின் கதைகள் போல் இருந்தால் தெரிவு செய்ய மாட்டேன். எனது கதாபாத்திரத்தில் என்ன புதுமை இருக்கு என்று பார்ப்பேன். இயக்குநர் அந்தக் கதை மூலம் நம்மள வெளிப்படுத்துவாரா என்று தெரிந்து கொள்வேன்.

இலங்கைக்கு பல தடவைகள் வந்து இருக்கிறீர்கள். அந்த அனுபவம் பற்றி?

பார்த்திபன் கனவு, வர்ணஜாலம் ஆகிய திரைப்படங்களை முழுமையாக இலங்கையில் தான் பண்ணினோம். பிறகு ஜூட் படத்தின் பாடல் காட்சிக்காகவும் இலங்கை வந்து இருக்கிறேன். றம்பொடை, நுவரெலியா, கண்டி, பெந்தோட்ட, கொழும்பு போன்ற இடங்களுக்கு திரைப்பட சூட்டிங்காக வந்து இருக்கிறேன்.


இதன்போது இலங்கை நடிகர்களுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பும் கூட கிடைத்தது. எங்களுக்கு தெரிந்த விடயங்களை பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளக் கூடியதாக இருந்தது. இலங்கை மக்கள் ரொம்பவும் அன்பும், பாசத்துடனும் பழகுபவர்கள். நாங்கள் தமிழ் நாட்டில் இருந்து வந்திருக்கிறோம் என்றதும் அவர்களுடைய விருந்தாளிகள் போல் கவனித்துக் கொண்டார்கள்.

உங்களுக்கு கிடைத்த விருதுகள் பற்றி?

விருதுகளை எண்ண முடியாது. அண்மையில் கூட மலேசியாவில் பாலச்சந்தரின் சேர் கையால சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது. சென்னையில படிக்கும் போதே எனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நான் முதலில் அறிமுகமானது சின்னத்திரையில்தான். பாலச்சந்தர் அவா்களின் மரபுக்கவிதைகள் என்ற தொலைக்காட்சி தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இயக்குநர் ஆகும் ஆசை?

நான் நடிப்புல மட்டும் தான் கவனம் செலுத்தனும் என்று நினைக்கிறேன். நடிப்பு கடல் மாதிரி. நான் இன்னும் நிறைய தெரிந்துகொள்ள வேண்டியிருக்கும். நான் என் திறமையை இன்னம் வளர்த்துக்கொள்ள ஆசைப்படுகின்றேன். *

உங்களுடன் இணைந்து நடித்த நடிகைகள் பற்றி?


நான் அதிகமா சினேகா, மீராஜாஸ்மின், சோனியா அகர்வால் ஆகியோருடன் ஜோடி சேர்ந்து நடிச்சிருக்கேன். சினேகா புன்னகை அரசி. நன்றாக தமிழ் பேசுவாங்க. தமிழ் மக்கள் மனதில் இடம் பிடித்தவங்க. இவங்க கூட நடித்ததில் எனக்கு பெருமையும் மகிழ்ச்சியுமாக இருக்கு. அடுத்தது மீரா ஜாஸ்மின், நடிப்பு என்பது அவங்களுக்குள் ஊறியிருக்கும் ஒரு விடயம்.

ஒரு சிறந்த நடிகையுடன் நடித்ததில் ரொம்ப மகிழ்ச்சி. அப்புறமா சோனியா அகர்வால். இவங்களுக்கு தமிழ் பேச வராது என்றாலும் ரொம்ப அன்பாக பழகுவாங்க. இவங்க 3 பேர் கிட்ட இருந்தும் பல விடயங்களை கற்றுக்கொண்டேன்.

நீங்கள் சந்திக்க நினைக்கும் நபர் ?

வேற யாருங்க! நம்ம உலக நாயகன் கமல்தான். கமல் பெரிய அறிவாளி. சினிமாவைப் பற்றி எத்தனை கேள்வி கேட்டாலும் அதற்கு பதில் கொடுத்து கொண்டே இருப்பாருன்னு கேள்விப்பட்டிருக்கிறேன்.

நீங்கள் நடித்ததில் உங்களுக்குப் பிடித்த காட்சி?

நண்பன்’ படத்தில் ஒரு காட்சி. நான் படிக்காமல் கேமரா மேனாக போகனும்னு அப்பாவிடம் சொல்ல அவர் வேண்டாம்னு சொல்வாரு. அந்த சமயத்தில என் ஆசை நிறைவேறாத ஏக்கத்தில அழுவேன். அந்த காட்சியில் உண்மையாகவே அழுதுட்டேன்.

இந்தக் காட்சி என் வாழ்க்கையில் நடந்த காட்சியாகத் தான் பார்க்கிறேன். ஆரம்பத்தில் அப்பாகிட்ட படிப்ப விட்டுட்டு சினிமாவுக்கு போவதற்கு அனுமதி கேட்டேன். அப்பா சம்மதிக்கலை. அப்போது நண்பன் படக்காட்சி போன்றே அழுதேன்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!