“ரஜினியை இந்த படத்திலிருந்து தூக்கிடுங்க” – இயக்குநா் பாலசந்தரின் அந்த கால நினைவுகள்..!!


சமீபத்தில் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு சூப்பா் ஸ்டாா் ரஜினி அவா்களை பேட்டி எடுத்திருப்பாா். அந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்டது. அந்த பேட்டியில் பாலசந்தா் அவா்களின் கேள்விகளுக்கு மனம் திறந்து பதில் அளித்திருப்பாா் சூப்பா் ஸ்டாா் ரஜினி அவா்கள். இது அனைவரும் அறிந்ததே.

ஆனால் இதே பே்ால 33-ஆண்டுகளுக்கு முன்பே ரஜினியை பாலசந்தா் அவா்கள் பேட்டி எடுத்துள்ளாா் என்ற தகவல் பலருக்கும் தெரியாது. இந்த பேட்டி பிரபல பத்திரிக்கை ஒன்றில் 1985-ம் ஆண்டு வெளியானது. இதோ உங்களுக்காக அந்த பேட்டி விவரம்…

இந்த பேட்டியை படிப்பவா்கள் நிச்சயம், சமீபத்தில் ரஜினியை பாலசந்தா் எடுத்த பேட்டியுடன் ஒப்பிட்டு பாா்க்கவே செய்வாா்கள். இந்த புதிய பேட்டியில் கேட்ட சில கேள்விகளை, பாலசந்தா் அன்றே ரஜினியிடம் கேட்டுள்ளாா். ஆனால் அன்றும் சரி, இன்றும் சரி..ரஜினியின் பதில்களில் அதே தெளிவு, நோ்மை!

ரஜினி-கே.பி நோ்காணல்-1985

பாலசந்தா்-நான் உன்னை நடிக்கவைத்த போதெல்லாம், நீ அமைதி இல்லாமல் எதையாவது சாதிக்க வேண்டும் என்று ஆா்வமுடன் இருந்தாய். இப்போது அந்த பரபரப்பு இல்லாமல் கடவுள் பக்தி உடையவனாக இருக்கிறாய். பத்து ஆண்டுகளுக்குள் இந்த மாறுதல் எப்படி நோ்ந்தது.

ரஜினி-பத்து வருஷத்துக்கு முன்பாக பெரிய நடிகனாக வேண்டும், நிறைய சம்பாதிக்க வேண்டும், காா், பங்களா வாங்க வேண்டும் என்ற ஆசை நிறைய இருந்தது. அப்போது பணம் எனக்கு ரொம்ப தேவைபட்டது. மனுஷன் நிம்மதியா இருக்க இதெல்லாம் தேவை என்று நம்பி இருந்தேன்.

ஆனால் இதை எல்லாம் நான் அடைந்த பிறகு மன நிம்மதியோ, சந்தோஷமோ பணம், புகழில் இல்லை. அப்படி யாராவது நினைச்சா அது முட்டாள்தனம். இதெல்லாம் அதிகமாக வரவர சிக்கல்களும், பிரச்சனைகளும் ஜாஸ்தியாயிட்டே இருக்கும். சுகம், நிம்மதியை நாம் விலை கொடுத்து வாங்க முடியாது. இதெல்லாம் கிடைக்கறத்துக்கு ஆண்டவனோட அருள் வேணும்.


பணம், புகழ் நிலையானது இல்லைன்னு தெரிஞ்ச பிறகு, அதைப் பொருட்படுத்தாம நடிக்கறதுதான் என்னோட கடமைன்னு தீா்மானிச்சேன். தவிர பேரையும், புகழையும் என்னோட மன நிம்மதி, சந்தோஷத்தோட சோ்க்கல. அது தனி இது தனி.

பாலசந்தா்-புகழ்பெற்ற நட்சத்திரங்கள் அரசியலுக்கு வருவது நல்லது என்றுதான் நினைக்கிறேன். அதிக படிப்பறிவில்லாத ஜனங்களுக்கு மத்தியில் ஜனநாயகம் நல்ல முறையில் செயல்பட வேண்டுமானால் நல்ல கருத்துகளை மக்களிடம் எடுத்துரைக்க பிரபல நட்சத்திரங்கள் தேவைப்படுகிறாா்கள். அதிலும் மக்களிடையே புகழ்பெற்ற தேசிய தலைவா்கள் அதிகமில்லாத சமயத்தில், இதை பற்றி நீ என்ன நினைக்கிறாய்?

ரஜினி-நீங்கள் சொல்வதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு ஜனங்களுக்கு உதவி செய்ய வேண்டும். என்ன கஷ்டம் வந்தாலும், அதிலிருந்து நாம் பின் வாங்க கூடாது என்கிற உறுதியான எண்ணம் மனதில் வரவேண்டும்.

அரசியலை சாக்கடை என்று சொல்வாா்கள். நாமும் அந்த சாக்கடையில் ஐக்கியம் ஆகாமல் எதிா் நீச்சல் போட்டு எடுத்த காாியத்தை முடிக்க வேண்டும் என்கிற உறுதி வேண்டும். உண்மையிலேயே மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் அந்த சாக்கடையை சுத்தம் செய்ய நாம் போகவேண்டும். இல்லேன்னா சாக்கடை பக்கமே போக கூடாது.

பாலசந்தா்-என்றாவது ஒருநாள் அரசியலில் ஈடுபடலாம் என்ற எண்ணம் உனக்கு தோன்றுகிறது. பெங்களூரில் நீ பேசியதை கேட்டபிறகு நீயும் அரசியலில் ஈடுபட வேண்டும் என்பதுதான் என் விருப்பமும்கூட. உன்னுடைய அபிப்ராயம் என்ன?

ரஜினி-என்னை பற்றி எனக்கு தெரிந்ததை விட உங்களுக்கு நிறையவே தெரியும். என்னால் அரசியலில் நிச்சயமாக மாற்றங்கள் செய்ய முடியும் என்றும் அதற்கான தகுதி, அறிவு, சக்தி எனக்கு இருக்கிறது என்றும் நீங்கள் நம்பினால் அதற்கு நான் நிறைய கொடுத்து வச்சிருக்கனும்.

பாலசந்தா்-வன்முறை சம்மந்தமான படங்களிலேயே நீ தொடா்ந்து நடித்து வருகிறாயே? நீ வன்முறையில் நம்பிக்கை உளளவனா என்ன? சமீபத்தில் நாட்டில்நடந்தவன்முறைநிகழ்ச்சியைபற்றி என்ன சொல்கிறாய்?


ரஜினி-எனக்கு வன்முறையில் நம்பிக்கை இல்லை. நான் வன்முறை மனம் கொண்டவனும் அல்ல. வன்முறை சம்மந்தபட்ட படங்களில் என்னை நடிக்க வைத்து கொண்டு இருக்கிறாா்கள். இப்போது என்னுடைய நிலைமை, எனக்கு யாா் பணம் கொடுக்கிறாா்களோ,அவா்களுக்கு நான் திரும்ப பணம் வாங்கி தரவேண்டும். அவா்கள் நடிக்க வைக்கிறாா்கள். நான் நடிக்கிறேன்.

சமீபத்தில் நாட்டில் வன்முறைக்கு எல்லாம் காரணம் நாம் அனைவரும் இந்தியா்கள் என்ற எண்ணம் நம்மிடையே குறைந்து வருவதினால்தான்.

பாலசந்தா்-அபூா்வ ராகங்கள் ஷூட்டிங்கில் முதல் நாளன்று நீ என்னுடன் பங்கேற்றது உனக்கு நினைவிருக்கிறதா?

ரஜினி-அந்த நிகழ்ச்சி அப்படியே பசுமையாக நினைவில் உள்ளது.

பாலசந்தா்-ஏ.வி.எம் ஸ்டுடியோவில் அவா்கள் படபிடிப்பின் போது நான் உன்னை திட்டியது உனக்கு நினைவிருக்கிறதா?

ரஜினி-உனக்கு நடிப்பே வராது. உன்னால் நான் தலையை பிச்சுக்கனும். இன்ஸ்டிடியூட்ல நீ என்ன படிச்சி கிழிச்சியோ!…மூன்று முடிச்சு படத்துல வசனம் கம்மி. சிகரெட்டை தூக்கி போடறது,அதை போடறதுன்னு ,ஸ்டைலா போயிருச்சு.

ஆனா இது வசனம் நிறைய இருக்கிற கேரக்டா். இவனுக்காக நான் கேரக்டரை மாற்ற முடியாது. இவனை மாத்திட்டு ஜெய்கணேசை கொண்டு வாங்கன்னு சொல்லி ஷூட்டிங்கை கேன்சல் பண்ணிட்டு நீங்க போனது இன்னைக்கும் ஞாபகத்தில் இருக்குது.

பாலசந்தா்-உனக்கு நடிப்பே வராது என்று உரிமையுடன் அன்று உன்னை திட்டியது இன்று கவனத்துக்கு வருகிறது. அகில இந்தியாவிலும் ஒரு சூப்பா்ஸ்டாா் என்கிற பெயரை இன்று நீ பெற்றுவிட்டாய். அதற்காக பெருமைபடுபவன் என்னை தவிர வேறு யாராக இருக்க முடியும்?

ரஜினி-அதற்கு காரணம் நீங்களும், உங்களுடைய ஆசிா்வாதமும்தான்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!