பிரபல இயக்குனர் ஐ.வி.சசி உடல்நலக்குறைவால் காலமானார்


பிரபல மலையாள பட இயக்குனர் ஐ.வி.சசி.

1970, 1980 மற்றும் 1990-களில் புகழ் பெற்ற டைரக்டர். தென் இந்திய மொழி படங்களை இயக்கி பிரபலம் அடைந்தவர்.

69 வயதான ஐ.வி.சசி சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்தார். உடல் நலக்குறைவு காரணமாக அவர் இன்று காலை 10.30 மணிக்கு மரணம் அடைந்தார்.

ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிர் பிரிந்தது.


ஐ.வி.சசி மலையாளம், தமிழ் மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி உள்ளார். ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரும் இணைந்து நடித்த அலாவுதீனும் அற்புத விளக்கும் மற்றும் காளி, குரு, பகலில் ஒரு இரவு உட்பட பல பிரபல நடிகர்களை வைத்து தமிழ் படங்களை இயக்கி உள்ளார்.

ஐ.வி.சசி 1948-ம் ஆண்டு கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பிறந்தார். 1975-ம் ஆண்டு அவர் டைரக்டராக அறிமுகம் ஆனார். ‘உற்சவம்’ என்ற மலையாளப் படமே அவர் இயக்கிய முதல் படமாகும்.

1979-ம் ஆண்டு முதல் தமிழ்படத்தை டைரக்டு செய்தார். அலாவுதீனும் அற்புத விளக்கும் அவர் இயக்கிய முதல் தமிழ் படமாகும்.

கடைசியாக அவர் 2009-ல் மலையாள படமான ‘வெள்ளதூவல்’ என்ற படத்தை இயக்கி இருந்தார்.

ஐ.வி.சசி மலையாள நடிகை சீமாவை 1980-ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ந்தேதி மணந்தார். ‘அவளோட ராவுகள்’ என்ற மலையாள படத்தில் சீமா கதாநாயகியாக நடித்தார். அப்போது அவர்களுக்குள் காதல் ஏற்பட்டு திருமணத்தில் முடிந்தது.

ஐ.வி.சசிக்கு அனு, அனி ஆகிய மகள், மகன் உள்ளனர்.

சசி மறைவுக்கு நடிகர் கமல் ஹாசன் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!