இம்சை அரசன் பிரச்சனை முடிந்தது..? விரைவில் படப்பிடிப்பு தொடக்கம் என அறிவிப்பு..!!


இம்சை அரசன் படத்தில் நடிக்க மறுத்ததால் நடிகர் வடிவேலுவுக்கு தமிழ் சினிமாவில் நடிக்க தடை விதிக்க இருப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம்.

சிம்பு தேவன் இயக்கத்தில் வடிவேல் கதாநாயகனாக நடித்து 2006-ல் வெளிவந்த இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ என்ற பெயரில் இயக்குனர் ஷங்கர் தயாரிக்க முடிவு செய்து அதற்கான பணிகளும் நடந்தன. இதற்கிடையே சில கருத்து வேறுபாடுகள் காரணமாக வடிவேலு இம்சை அரசன் இரண்டாம் பாகத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.

இதனால் தனக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாக ஷங்கர் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சங்கத்தை நாடினார். எனினும் தீர்வு எட்டவில்லை. இந்த நிலையில் தான் வடிவேலுக்கு சினிமாவில் தடை விதிக்கப்பட இருப்பதாக செய்திகள் பரவின. எனினும் வடிவேலு விடாப்பிடியாக இருந்தார்.


இந்த நிலையில், இம்சை அரசன் படக்குழுவுக்கும், வடிவேலுவுக்கும் இடையே சுமூகம் ஏற்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது மதுரையில் இருக்கும் வடிவேலு, படப்பிடிப்புக்காக சென்னை வர சம்மதித்திருப்பதாக கூறப்படுகிறது.

முன்னதாக படப்பிடிப்புக்காக சென்னையில் பெரிய அரங்குகள் அமைக்கப்பட்டு, பல்வேறு துணை நடிகர், நடிகைகளும் ஒப்பந்தமாகினர். வடிவேலுவின் விடாப்பிடியால் அனைவரும் தேதியை ஒதுக்கிட்டு தவித்தனர்.

இந்த நிலையில், பிரச்சனை முடிவுக்கு வந்திருப்பதால் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு குறித்த நேரத்தில் தொடங்கும் பட்சத்தில் படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!