சினிமாவில் பெண் சுதந்திரம் இப்படிதானா..? சர்ச்சையில் ஜோதிகாவின் நாச்சியார் டீசர்..!!!


சென்னை: பெண் சுதந்திரம் என்பதற்கு தமிழ் சினிமா உலகம் இப்போதெல்லாம் புது இலக்கணம் எழுத ஆரம்பித்துள்ளது. புரட்சி நோக்கம் கொண்ட பெண்களை தவறான வழிக்கு இழுத்துச் சென்று அவர்களை முனை மழுங்கச் செய்யும் வேலையை கச்சிதமாக சினிமாத்துறையில் சிலர் செய்துகொண்டுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் இரு படங்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. ஒன்று லட்சுமி குறும்படம், மற்றொன்று, பிரபல இயக்குநர் பாலாவின் நாச்சியார் திரைப்படம்.

பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நாச்சியார் படத்தின் டீஸர் நேற்று வெளியாகியுள்ளது. தொடர் தோல்விகளுக்கு பிறகும், பாலாவின் வழக்கமான பாணியிலேதான், எந்த மாற்றமும் இன்றி படம் உருவாகி உள்ளது.

அசிங்கமான டயலாக்
எரிச்சல் கிளப்பும் டயலாக்

பாலாவின் வழக்கமான பாணியை பற்றி தமிழர்களுக்கு எந்த கவலையும் இல்லை. ஏனெனில் அந்த ‘வழக்கத்தால்’ போரடித்துப்போனதால் தியேட்டர் பக்கம் ரசிகர்கள் செல்வதில்லை. இதனால்தான் அடுத்தடுத்த பாலா படங்கள் தோல்வியை தழுவியுள்ளன. இருப்பினும் டீசரில் ஜோதிகா பேசும் ஒரு வார்த்தைதான் ரசிகர்களுக்கு எரிச்சலை கிளப்பியுள்ளது. ஒருவேளை இப்படி சர்ச்சையை கிளப்பியாவது தியேட்டருக்கு ரசிகர்களை வரவழைக்கலாம் என்று நினைக்கிறாரோ என்னவோ?

தே.. பயலே
கெட்ட வார்த்தை


படத்தில் ஜோதிகா கதாப்பாத்திரம் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளது. வழக்கமாக பாலா தனது திரைப்படங்களில் போலீஸ் கதாப்பாத்திரங்களை ரொம்பவே லகுவாக காட்டுவார். இப்படத்தில் வேறு மாதிரி காட்டியுள்ளார். ஜோதிகா கதாப்பாத்திரம் ‘தே.. பயலே’ என்ற வார்த்தையை பேசுவதை போல டீசர் நிறைவடைவதுதான் நெருடலை ஏற்படுத்தியுள்ளது.

அடடே, பெண் சுதந்திரம்
தாயை திட்டுவதுதான் பெண் சுதந்திரமா?

வெங்கட் பிரபு இயக்கத்தில், வெளியான, மங்காத்தா திரைப்படத்தில் அஜித் கதாப்பாத்திரம் இதே வார்த்தையை பேசுவதாக இருக்கும். ஆனால், அந்த வார்த்தை மியூட் செய்யப்பட்டிருக்கும். ஆனால் நாச்சியார் படத்தில் அந்த வார்த்தை ‘பச்சையாக’ பேசப்படுகிறது. இதை பெண் சுதந்திரம் என்று சிலர் கூறக்கூடும். ஒரு ஆணை பார்த்து திட்டும்போது, அவனின் தாயை நடத்தை கெட்டவள் என்று கூறி திட்டுவது எந்த லாஜிக்கில் பெண் சுதந்திரம்? பெண்ணை பெண்ணே திட்டுவது பெண் சுதந்திரம் என்றால், பெரும்பாலான மாமியாரும்-மருமகளும் அந்த சுதந்திரத்தை ரொம்ப ஆண்டுகளாகவே அனுபவித்துதானே வருகிறார்கள்.

இதே வேலையாகப்போச்சே
கள்ளக்காதலுக்கு புனித முலாம்

இதேபோலத்தான் சர்ஜன் இயக்கத்தில் வெளியான, லட்சுமி குறும்படத்தில் கணவனின் நடவடிக்கை பிடிக்காமல் ரயில் பயணத்தில் பார்த்த வாலிபனோடு, கதாநாயகி, கள்ளக்காதல் செய்யும் காட்சி இடம் பெற்றிருக்கும். இதையும் பெண் சுதந்திரம் என மடைமாற்றும் போக்கு இருந்தது. பெரும்பாலும் வட இந்தியாவில் காட்டப்பட்டு வந்த இந்த போலி பெண்ணியத்தை, தமிழகத்து மண்ணிலும் பரப்ப திரைக்கலைஞர்கள் ஆயத்தமாக உள்ளது இவ்விரு படங்களும் உணர்த்துகிறது.

மோசமான செயல்
அதே ஜோதிகா நடித்த படத்தை பாருங்க

பெண் சுதந்திரம் என்னால் என்ன என்பதை பல வார்த்தைகளின் கோர்வை கொண்டு விளக்க தேவையில்லை. இதே ஜோதிகா நடித்த ’36 வயதினிலே’ படத்தை பார்த்தவர்கள் சொல்வார்கள் எது பெண் சுதந்திரம் என்பதை. ஆனால் அதே ஜோதிகாவை பெண்களை தப்பாக வழிநடத்த இந்த திரையுலகம் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது ஆபத்தின் அறிகுறி.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#