சர்கார் படம் ஓடும் தியேட்டர்களுக்கு இப்படியொரு நிலைமையா..? போலீஸ் பாதுகாப்பு தீவிரம்..!!


விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள சர்கார் படத்தில் தமிழக அரசின் இலவச பொருட்களை தீயில் போட்டு எரிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த காட்சியில் படத்தின் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாசே நடித்துள்ளார்.

தமிழக அரசின் பொதுப்பணித்துறை, போக்குவரத்துறை, மின்சார துறை ஆகிய துறைகள் சரியாக செயல்படவில்லை என்றும் படத்தில் வசனங்கள் இடம் பெற்றுள்ளது. வில்லியாக நடித்திருக்கும் வரலட்சுமிக்கு கோமளவல்லி என்று பெயர் சூட்டியுள்ளதும் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. இது ஜெயலலிதாவின் பெயர் என்று கூறி குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுபோன்ற காட்சிகளை சர்கார் படக்குழுவினரே நீக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக நேற்று மாலையில் சர்கார் படம் ஓடும் தியேட்டர்கள் முன்பு அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் குதித்தனர்.

அப்படத்துக்காக விஜய் படத்துடன் வைக்கப்பட்டிருந்த பேனர்களை கிழித்து எறிந்தனர். சில இடங்களில் பேனர்கள் தீ வைத்தும் கொளுத்தப்பட்டன. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் தியேட்டர்கள் முன்பு வைக்கப்பட்டிருந்த சர்கார் பட பேனர்கள் அகற்றப்பட்டன.


அ.தி.மு.க.வினர் நடத்திய இந்த போராட்டத்துக்கு எதிராக சில இடங்களில் விஜய் ரசிகர்களும் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

போலீசார் தலையிட்டு அவர்களை சமாதானம் செய்தனர். இதுபோன்ற மோதல் மீண்டும் ஏற்படாமல் இருப்பதை கருத்தில் கொண்டு சர்கார் படம் ஓடும் தியேட்டர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் சர்கார் படம் 68 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. சென்னை ஜாபர்கான் பேட்டையில் உள்ள காசி தியேட்டரில் நேற்று மாலையில் அ.தி.மு.க.வினர் திரண்டு பேனர்களை கிழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தேவி தியேட்டரிலும் பேனர்கள் கிழிக்கப்பட்டன.

இதுபோன்ற அசம்பாவிதங்கள் மீண்டும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு 68 தியேட்டர்கள் முன்பும் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அந்தந்த பகுதி உதவி கமி‌ஷனர்கள் தலைமையில் தியேட்டர்கள் முன்பு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பும் வரையில் இந்த பாதுகாப்பு நீடிக்கும் என்று தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!