விஜய் அரசியலுக்கு வருவது உண்மையா..? பழ.கருப்பையா அதிரடி பேட்டி..!!


ஒரு படம் தணிக்கை குழு அனுமதித்து வெளிவந்து விட்ட பிறகு ஒவ்வொருவரும் இதை நீக்கு, அதை நீக்கு என்று சொன்னால் தணிக்கை குழுவுக்கு வேலையே இல்லை.

இத்தனை பேரிடம் ஓட்டெடுப்பு நடத்தி ஒரு படமெல்லாம் வெளியிட முடியாது. அதற்கென்று ஒரு குழு இருக்கிறது. அந்த குழு இதை அனுமதித்து இருக்கிறது.

நான் பல சமயங்களில் பேசிய வசனங்கள் அதில் மியூட் செய்யப்பட்டுள்ளது. எனது குரல் ஒடுக்கப்பட்டுள்ளது. வெறும் வாய் மட்டும் அசையும். அதில் ஒன்று கலைஞரைப் பற்றிய வசனம். கலைஞரை மறைமுகமாக சுட்டிக் காட்டும் வசனம் ஒன்றும் அதிலே இருக்கிறது.

15 வயதில் டவுசர் போட்டுக் கொண்டு இந்தியை எதிர்த்தேன் என்று சொன்னால் அது கலைஞரை குறித்துவிடும் என்பதற்காக அதை நீக்கி இருக்கிறார்கள்.

சர்கார் படத்தில் உங்களைப் பற்றிய வசனங்களையும் நீக்கி இருந்தால் அதை முருகதாஸ் ஏற்றுக் கொண்டிருப்பார். ஆனால் அனுமதித்த பிறகு இதை நீக்கு, அதை நீக்கு என்று ஒவ்வொரு வசனத்தையும் நீக்கு என்று சொல்லாதீர்கள். நீக்கு என்று சொன்னால் ஒவ்வொரு வசனத்தையும் நீக்கிக் கொண்டிருக்க முடியாது. படத்தையே நீக்கு என்று சொல்லுங்கள்.


எனவே இந்த படம் முழுவதும் நிகழ்கால அரசியல் குறித்ததுதான். நிகழ்கால அரசியல் மதிக்கத்தக்கதாக இருக்கிறதா என்று நானே கேட்கிறேன். இலவசத்தின் மூலம்தான் நடத்துகிறீர்கள். கமி‌ஷன் வாங்காத, ஊழல் செய்யாத துறை என்று ஒரு துறையுமே கிடையாது. நாட்டிலே மணலை இறக்குமதி செய்யக்கூடிய அளவுக்கு நீங்கள் கொண்டு வந்து விட்டீர்கள்.

நடிகர் விஜய் நிச்சயமாக அரசியலுக்கு வருவார். இது என்னுடைய கருத்து. இந்த படம் முழுவதும் அவருடன் பழகுகின்ற வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவரிடம் ஒரு உறுதி இருக்கிறது. தனக்கு அளப்பரிய அன்பு செலுத்துகின்ற இந்த சமூகத்துக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று என்னிடம் சொன்னார். அதனால் இப்போது வருவாரா என்று எனக்கு தெரியாது.

அவருக்கு பெரிய மார்க்கெட் இருக்கிறது. பெரிய வலிமையான வயது இருக்கிறது. 40 வயதில் 20 வயது பையன் போல இருக்கிறார். ரொம்ப அபூர்வமான உடல் அமைப்பு. அதனால் ஒரு கிரேஸ் இருப்பவர் அதையெல்லாம் விட்டு விட்டு இப்போது அரசியலுக்கு வருவாரா என்று எனக்கு தெரியாதே தவிர அவர் உறுதியாக அரசியலுக்கு வருவார்.

அவர் என்னிடம் பேசியதை வைத்து சொல்கிறேன். அவர் என்னிடம் கூறும்போது, “தனக்கு ஒரு நல்ல குடும்பம் இருக்கிறது. மனைவி இருக்கிறார். ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள். பணம் வழிந்தோடுகிறது.

எனவே இவ்வளவு அன்பு செலுத்திய மக்களுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்” என்று சொன்னார். மிகச்சிறந்த சிந்தனை. நாள் தள்ளிப் போடாமல் இதை செய்யுங்கள் என்று சொன்னேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!