தி மெக் – சினிமா விமர்சனம்


ஆழ்கடல் மீட்புக்குழுவில் வேலை பார்த்து வருகிறார் ஜேசன். கடலுக்கு அடியில் நீர் மூழ்கிக் கப்பலில் சுறா தாக்கியதால் உயிருக்கு போராடி வருபவர்களை சில பேரை காப்பாற்றுகிறார். அதே போல் மீண்டும் ஒருமுறை சுறா தாக்குகிறது. இதில் ஜேசனின் முன்னாள் மனைவி பாதிக்கப்படுகிறார். இவரை ஜேசன் காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, பூமியில் தரையில் வாழ்ந்த ராட்சத மிருகம் டைனோசர் என்றால், கடலில் வாழ்ந்த விலங்கு மெக்லோடன் என்கிற சுறா. தற்போதுள்ள சுறாக்களை விட பத்து மடங்கு பெரியது. டைனோசரை வைத்து ஜூராசிக் பார்க் வந்த மாதிரி, மெக்லோடனை வைத்து வந்துள்ள படம், தி மெக். 70 அடி நீளம் கொண்ட மெக், மனிதர்களை அழிக்க தொடங்குகிறது. எனவே, அதை வேட்டையாட கிளம்புகிறார் ஜேசன். தி டிரான்ஸ்போர்ட்டர் படங்களில் கார் ஓட்டி கலக்கிய அவர், இதில் சுறாவை தீவிர வேட்டையாடுகிறார்.

திங்பிக், ரஷ் அவர், நேஷனல் டிரஸ்சர் ஆகிய படங்களை இயக்கிய ஜோன் டுர்ட்வலட்டப் இயக்கியுள்ளார். பிரமாண்ட கடல், அதைக் கட்டியாளும் மெக், நவீன யுத்திகளை பயன்படுத்தி அதை வேட்டையாட கிளம்பும் டீம் என, சுறா படங்களுக்கே உரித்தான ஆடுபுலி ஆட்டம்தான் திரைக்கதை. இந்த ஆக்‌ஷனுக்குள் ஒரு சிறுமியை ஊடுருவ விட்டு பரபரப்பு காட்டுகின்றனர்.

குழந்தைகள் மிரண்டு ரசித்து சிரிக்கிறார்கள். ஏற்கனவே வந்த சுறா படங்களை பார்த்தவர்கள் நெளிகிறார்கள். காட்சிகள் பிரமாண்டமாக இருந்தாலும், திரைக்கதையில் சுவாரஸ்யம் குறைவு. சில காட்சிகளில் கிராபிக்ஸ் பணிகள் பளிச்சென்று தெரிகிறது. எனினும், கடல் துரத்தல் காட்சிகள் மற்றும் கிளைமாக்ஸ், சீட் நுனியில் உட்கார வைத்து விடுகிறது.

மொத்தத்தில் ‘தி மெக்’ கிக்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!