நெஞ்சில் துணிவிருந்தால் – சினிமா விமர்சனம்


நாயகன் சந்தீப்பின் அப்பாவான சிவா, ஒரு சிறிய ஆபரேஷனுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். ஆனால், தவறான ஆப்ரேஷன் காரணமாக அவர் இறந்துபோகிறார். அந்த மருத்துவமனையின் போலி டாக்டர்களால்தான் சிவா இறந்தார் என்று நிரூபித்து அவருக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கிறார்கள்.

பின்னர், சந்தீப் தன்னுடைய நெருங்கிய நண்பர்களான விக்ராந்த், சூரி, அப்புக்குட்டி ஆகியோருடன் ஒன்றாக சேர்ந்து கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். தன் தங்கையை டாக்டருக்கு படிக்க வைக்கிறார். விக்ராந்த், சந்தீப்பின் தங்கையை சந்தீப்புக்கு தெரியாமல் காதலித்து வருகிறார்.


இந்நிலையில், பணத்திற்காக கொலை செய்யும் தாதாவான ஹரிஷ் உத்தமன், விக்ராந்தையும், சந்தீப்பின் தங்கையையும் கொலை செய்ய திட்டமிடுகிறார். இறுதியில், ஹரிஷ் உத்தமனிடம் இருந்து விக்ராந்தும், சந்தீப்பின் தங்கையும் தப்பித்தார்களா? எதற்கு ஹரிஷ் உத்தமன் கொலை செய்ய முயற்சிக்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சந்தீப் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நட்பு, காதல், சண்டை, என நடிப்பில் பளிச்சிடுகிறார். நட்பை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தி இருக்கிறார். தமிழுக்கு கிடைத்த சிறப்பான நடிகர் என்றே சொல்லலாம். மற்றொரு கதாநாயகனாக நடித்திருக்கும் விக்ராந்தும், நட்பா, காதலா என விட்டுக்கொடுக்காத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் மெஹ்ரின் பார்ப்பதற்கு அழகாகவும், அளவான நடிப்பையும் கொடுத்திருக்கிறார். வில்லனாக வரும் ஹரீஷ் உத்தமனின் கெட்டப் சூப்பர். நடிப்பிலும் மிரட்டியிருக்கிறார். சூரியின் காமெடி பெரிதாக எடுபடவில்லை என்றே சொல்லலாம்.


சுசீந்திரனின் திரைக்கதைகள் எப்போதும் ஒரே சீராக பயணிக்கும். அந்த வகையில் சமூக அக்கறையுடன் கூடிய கதைக்களத்தை இப்படத்தில் அமைத்திருக்கிறார். ஆனால், தவறான மருத்துவ சிகிச்சையில் ஆரம்பித்து, அடுத்து கந்துவட்டி, கடைசியில் மெடிக்கல் சீட்டு என திரைக்கதை தாவியிருக்கிறது. இந்த குழப்பமான திரைக்கதையால் எதுவுமே மனதில் நிற்காமல் போகிறது.

இமான் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கூடுதலாக கவனம் செலுத்தி இருக்கலாம். லட்சுமணின் ஒளிப்பதிவு ரசிக்க வைத்திருக்கிறது.

மொத்தத்தில் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ சமூக அக்கறை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!