தி ஃபாரீனர்- சினிமா விமர்சனம்


முன்னாள் போர் வீரரான ஜாக்கி சான் லண்டனில் உணவகம் நடத்தி வருகிறார். அப்போது, தீவிரவாதிகள் நடத்தும் குண்டுவெடிப்பில், தன் மகளை ஜாக்கி சான் இழக்கிறார். வருத்தத்தில் இருக்கும் ஜாக்கி சான், தன் உணவகத்தில் வேலை பார்க்கும் பெண்ணிடம் உணவகத்தை ஒப்படைத்து விடுகிறார்.

இந்த குண்டு வெடிப்பு வழக்கை பியர்ஸ் பிராஸ்னன் விசாரிக்கிறார். ஆனால், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால், தன் மகளை கொன்றவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் தானே களமிறங்குகிறார் ஜாக்கிசான். இந்த சம்பவத்தை விசாரிக்கும் பியர்ஸ் பிராஸ்னனுக்கு கொலையாளிகள் யார் என்று தெரியும் என யூகிக்கிறார் ஜாக்கிசான்.

இதனால், இவர்களுக்குள் மோதல் ஏற்படுகிறது. இந்த மோதலுக்கு மத்தியில் அந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தியவர்கள் யார் என்பதை ஜாக்கிசான் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.


ஸ்டீபன் லெதர் எழுதிய ‘தி சைனாமேன்’ என்கிற நாவலை படமாக்கி இருக்கிறார் இயக்குநர் மார்ட்டின் கேம்ப்பெல். பியர்ஸ் பிராஸ்னனை வைத்து கோல்டன் ஐ; டேனியல் கிரெய்கை வைத்து கேசினோ ராயல் என இரு ஜேம்ஸ்பாண்ட் படங்களை இயக்கிய மார்ட்டினின் படத்தில் அதிரடி இருக்குமென பார்த்தால், ஏமாற்றமே மிஞ்சுகிறது.

அறுபது வயதைக் கடந்தாலும், இன்னும் ஜாக்கி சானிடம் ரசிகர்கள் காமெடி சண்டைக் காட்சிகளை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அவரோ, சண்டைக் காட்சிகளில் இன்னும் அதிரடியில் மிரட்டுகிறார். காட்டுக்குள் நடக்கும் சண்டைக் காட்சி, அபார்ட்மென்ட்டில் நடக்கும் இறுதி சண்டை, என ஜாக்கி சான் மாஸ் காண்பித்திருக்கிறார்.

பியர்ஸ் பிராஸ்னனை நல்லவராகவும் அதே சமயம் வில்லனாகவும் காண்பித்திருக்கிறார்கள். பிராஸ்னனின் மனைவி, ஜாக்கி, அயர்லாந்து போலீஸ், பிராஸ்னனின் உயர் அதிகாரி என அனைவருக்கும் ஏகத்துக்கு பிராஸ்னனை மிரட்டுவது மட்டும் ஒரே வேலை.


மிகவும் மெதுவாக நகரும் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் அதிகமாக லாஜிக் களேபரங்களைக் குறைத்து, சுவாரஸ்யங்களைச் சேர்த்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

மொத்தத்தில் ‘தி ஃபாரீனர்’ சிறப்பு.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!