தளபதியின் ‘கத்தி’ Vs நயன்தாராவின் ‘அறம்’ படங்களின் மதிப்பீடு..!!!


நயன்தாரா நடிப்பில் ‘அறம் திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் படத்தில் குடிநீர் பிரச்னை பற்றியும் அரசின் அலட்சியம் குறித்தும் பேசப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘கத்தி’ படத்தின் கதை தன்னுடையது என வழக்குத் தொடுத்த கோபி நயினார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.


‘கத்தி’, ‘அறம்’ ஆகிய இரண்டு படங்களுமே சமூக நோக்கத்தில் எடுக்கப்பட்டிருக்கும் படங்கள்தான். இரண்டு படங்களும் ஷார்ப்பான வசனங்களோடு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் ‘கத்தி’ படத்தில் நீரரசியல் அழுத்தமாகப் பேசப்பட்டது போல, நயன்தாராவின் ‘அறம்’ படம் முழுமைக்கும் நீரரசியலும், அதிகார வர்க்கத்தின் ஆதிக்கமும் பேசப்படுகிறது. குடிநீர் பஞ்சம் எனும் மையக்கருத்தைச் சுற்றித்தான் ‘அறம்’ மொத்தக் கதையும் பயணிக்கிறது.


‘கத்தி’ படத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களின் சதியால் விவசாயிகளின் நிலங்கள் பறிபோகும் அவலம் காட்டப்பட்டிருக்கும். ‘அறம்’ படத்திலும் ‘விவசாயிகளுக்குக் கிடைக்காத தண்ணீர், வாட்டல் பாட்டில் நிறுவனங்களுக்கு மட்டும் எப்படி கிடைக்கிறது என்பதுதான் ஆச்சரியம்’ எனும் வசனம் இடம்பெற்றிருக்கிறது. இந்தப்படமும் கார்ப்பரேட்களின் உலகளாவிய சதியைக் குறிப்பிட்டுச் சொல்கிறது.

‘கத்தி’ படத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிரான சூப்பரான வசனங்களை விஜய் பேசியிருப்பார். அதனால் நிறைய வசனங்கள் வைரல் ஆகின. ‘அறம்’ படத்தில் அதிகார வர்க்கத்திற்கு எதிரான வசனங்களை நயன்தாராவும், ஊர் மக்களும் பேசி இருக்கிறார்கள். விஜய்யின் மாஸ் இல்லாததால் இந்த வசனங்கள் ‘கத்தி’ அளவுக்கு எடுபடாது என்பதே உண்மை.


‘கத்தி’ படத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் இருக்கும் தன்னூத்து கிராமம் கதைக்களமாக இருக்கும். ‘அறம்’ படத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் காட்டூர் கிராமம் கதைக்களமாக இருக்கிறது. இரண்டுமே நீரிரின்றி வறண்டுபோன பகுதிகளாகத்தான் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

‘கத்தி’ படத்தில் விஜய் இரு வேடங்களில் நடித்திருப்பார். திருடனாக இருக்கும் கதிரேசன் ஆள்மாறாட்டம் செய்து ஜீவானந்தத்துக்கு பதிலாக உதவி செய்வார். ‘அறம்’ படத்தில் அப்படியான காட்சிகள் எதுவும் இல்லை. ஆனால், த்ரில்லாக படத்தைக் கொண்டுசெல்ல சிறப்பான காட்சியமைப்பு கைகொடுத்திருக்கிறது.


‘கத்தி’ படத்தில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி கவனத்தை ஈர்க்க முயற்சி செய்வார்கள் தன்னூத்து மக்கள். ‘அறம்’ படத்திலும், குடிநீர் கேட்டு சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி ஆட்சியரான நயன்தாராவிடம் பிரச்னைகளைச் சொல்லித் தீர்வு கேட்பார்கள் காட்டூர் மக்கள். கத்தி படத்தில் விஜய் ஆட்சியராக இல்லாமல் போராட்டுவார்; ‘அறம்’ படத்தில் அதிகாரத்தோடு போராடுகிறார் நயன்தாரா.

‘கத்தி’ படத்தில் நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு விவசாயிகளின் பிரச்னையைப் புரிய வைப்பதற்காக சென்னைக்கு வரும் முக்கிய ஏரிகளின் குழாய்களுக்குள் சென்று போராட்டம் நடத்துவார்கள். ‘அறம்’ படத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையைக் காப்பாற்றுவதன் மூலம் பணியிடை நீக்கம் செய்யப்பட, பிறகு அதிகாரத்தைக் கைப்பற்றுவார் நயன்தாரா.


விஜய் மாஸ் நடிகர் என்பதால் ‘கத்தி’ படத்தில் சண்டைக்காட்சிகளும், டூயட் பாடல் காட்சிகளும் இடம்பெற்றன. விஜய் ரசிகர்களின் வரவேற்பைப் பெறுவதற்காக மசாலா சேர்க்கப்பட்டது. ‘அறம்’ படத்தில் அப்படியான மசாலா காட்சிகள் எதுவும் இல்லை. அதுவே படத்தைக் காப்பாற்றியிருக்கிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!