கார்கில் – சினிமா விமர்சனம்


ஐ.டி. கம்பெனியில் வேலை பார்க்கும் நாயகன் ஜிஸ்னு மேனனும், நாயகி சிவானி செந்திலும் காதலித்து வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்காவில் இருந்து சென்னை வரும் சிவானியின் அப்பாவை பெங்களூருவுக்கு கூட்டி வர வேண்டும் என்றும், இதற்கிடையே ஜிஸ்னு, அப்பாவிடம் நல்ல பெயர் வாங்கி காதலுக்கு பச்சைக் கொடி வாங்கிவிட வேண்டும் என்றும் சிவானி திட்டமிடுகிறார். சிவானியின் அப்பாவை கூட்டிவர ஜிஸ்னுவும் சம்மதம் தெரிவிக்கிறார்.

இந்த நிலையில், ஜிஸ்னு மேனனுக்கு அமெரிக்கா செல்வதற்கான வாய்ப்பு கிடைக்க, அதற்கான இண்டர்வியூ வைக்கப்படுகிறது. அதில் பங்கேற்பதற்காக ஜிஸ்னு பெங்களூரு செல்கிறார். இதையடுத்து சிவானி அப்பாவை அழைத்து வர தனது நண்பன் ஒருவனை அனுப்பி வைக்கிறார். கடைசி நேரத்தில் ஜிஸ்னுவின் நண்பனும் சொதப்ப, ஜிஸ்னு மேனனை ஒருதலையாக காதலிக்கும், அவருடன் பணிபுரியும், அவரின் கல்லூரி தோழி உதவிக்கு வருகிறாள்.

அவளிடம் தனது பிரச்சனையை கூற, சிவானியின் அப்பாவை தான் அழைத்து வருவதாக அவள் கூறுகிறாள். இதன்மூலம் ஜிஸ்னு மேனனையும், சிவானியையும் எப்படியாவது பிரிக்க வேண்டும் என்று ஜிஸ்னுவின் தோழி திட்டமிடுகிறாள்.


இவ்வாறாக ஒரே நாளில் தனக்கு வரும் அனைத்து பிரச்சனைகளையும் ஜிஸ்னு மேனன் எப்படி சமாளித்தார்? சிவானியின் தந்தை சம்மதத்தை வாங்கினாரா? சிவானியை கரம் பிடித்தாரா? அமெரிக்கா சென்றாரா? ஜிஸ்னுவின் தோழியின் திட்டம் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகன் ஜிஸ்னு மேனன் மட்டுமே காட்சியில் தோன்றும் நிலையில், அதை அவர் பொறுப்புடன் சமாளித்து நடித்திருக்கிறார். படத்தை இயக்கியுள்ளதுடன், படத்தில் நாயகியாகவும் நடித்துள்ள சிவானி மேனன், காட்சியில் நாயகனை மட்டுமே நிறுத்தி கதையை நகர்த்தி இருப்பது பொறுமை இழக்கச் செய்கிறது. கதைக்கேற்ற விறுவிறுப்பு படத்தில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஒரே நாளில் நாயகனை பிரச்சனைகள் சூழ அதனை அவர் காரில் பயணம் செய்து கொண்டே சமாளிக்கும் படியாக காட்சிகள் போர் அடிக்க வைக்கிறது.

விக்னேஷ் பை பின்னணி இசை படத்திற்கு பலம். கணேஷ் பரமஹம்சா ஒளிப்பதிவு சிறப்பு.

மொத்தத்தில் `கார்கில்’ வலுவில்லை.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!