என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா – சினிமா விமர்சனம்


பிரபல மனோநல மருத்துவர் அர்ஜுன். அவரது மகன் அல்லு அர்ஜுன் சிறு வயதில் இருந்தே இராணுவத்தில் சேர வேண்டும் என்ற வெறியுடன் இருக்கிறார். மிகவும் கோபக்காரனான அல்லு அர்ஜுன் பள்ளியில் படிக்கும் போது ஒருவரை கடுமையாக அடித்ததற்காக பள்ளியில் இருந்து நீக்கப்படுகிறார். இதனை அர்ஜுன் கண்டிப்பதால், அப்பா தன்னை புரிந்து கொள்ளவில்லை என்று வீட்டை விட்டு ஓடிவிடுகிறார் அல்லு அர்ஜுன்.

பின்னர் டெல்லிக்கு சென்று ராவ் ரமேஷ் வளர்ப்பில் வளர்ந்து இராணுவத்திலும் சேர்கிறார். இராணுவத்தில் சேர்ந்த பின்னரும் நிறைய முறை சஸ்பெண்ட் ஆகும் அல்லு அர்ஜுன், ஒரு பிரச்சனையின் போது போலீசாரால் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறார். அங்கும் தவறை தட்டிக் கேட்க போலீசாரை அடித்து மீண்டும் பிரச்சனையில் சிக்குகிறார். அவரை இராணுவத்தில் இருந்து பணிநீக்கம் செய்ய முடிவு செய்கின்றனர்.


அவருக்கு கடைசி வாய்ப்பாக பிரபல மனோநல மருத்துவரான அர்ஜுனிடம் நலமுடன் இருப்பதாக ஒரு சான்றிதழ் வாங்கி வரச் சொல்கின்றனர். நீண்ட இடைவேளைக்குப் பிறகு தனது மகனை பார்க்கும் அர்ஜுன், அல்லு அர்ஜுனுக்கு ஒரு தேர்வு வைக்கிறார். 21 நாட்கள் எந்த பிரச்சனையிலும் சிக்காமல், அடிதடிக்கு செல்லாமல் அமைதியாக, பொறுமையாக இருந்தால் அவருக்கு மனோநல சான்றிதழ் தருவதாக கூறுகிறார்.

இப்படி இருக்க அவரை சுற்றி பல பிரச்சனைகள் நடக்கிறது. அந்த ஊரில் பிரபல தாதாவான சரத்குமார் மற்றும் அவரது மகன் செய்யும் அட்டகாசங்களை பொறுத்துக் கொள்கிறார். இந்நிலையில், ராணுவ அதிகாரி ஒருவரை அல்லு அர்ஜுனின் கண் முன்னாலேயே சரத்குமாரின் மகன் கொன்றுவிடுகிறார். இவை அனைத்தையும் பார்த்துக் அல்லு அர்ஜுன் பொறுமையுடன் இருக்கிறார். இதற்கிடையே அல்லு அர்ஜுன் – அனு இம்மானுவேல் காதல் காட்சிகளும் அவ்வப்போது வந்து செல்கிறது.

கடைசி நாளில் அல்லு அர்ஜுன் தான் போலியாக மாறிவிட்டதாக நினைத்து வருத்தப்படுகிறார். ஒரு ராணுவ அதிகாரி தன் முன்னால் கொல்லப்படுவதை பார்த்துக் கொண்டு பொம்மையாக இருக்கும் நான் நானில்லை. தனது குணம் மாறிவிட்டது, நான் சரியான ஃபிட்டாக இல்லை என்று நிகைத்து வருத்தப்படுகிறார்.


கடைசியில் அல்லு அர்ஜுன் என்ன முடிவு செய்தார்? அல்லு அர்ஜுனுக்கு மனநல சான்றிதழை அர்ஜுன் வழங்கினாரா? அவர் மீண்டும் இராணுவத்தில் சேர்ந்தாரா? அவரது காதல் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

ஒரு ராணுவ வீரராக, கோபக்காரனாக, தவறை தட்டிக் கேட்கும் கதாபாத்திரத்தில் அல்லு அர்ஜுன் சிறப்பாக நடித்திருக்கிறார். நாட்டுப்பற்று, எல்லையில் நின்று போராட வேண்டும் என்று உணர்வுடன் வரும் அவரது கதாபாத்திரம் ரசிக்கும்படியாக இருக்கிறது. அனு இம்மானுவேல் வரும் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது. குறிப்பாக காதல் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார்.

அர்ஜுன் அமைதியானவராக, வலுவான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். தனது மகனுடன் மோதும் காட்சிகளில் அவருக்கு தீனி போடும் நடிப்பு கொடுத்திருப்பதற்கு பாராட்டுக்களை தெரிவிக்கலாம். அசைக்க முடியாத வில்லன் கதாபாத்திரத்தில், கம்பீரமான தோற்றத்தில் வரும் சரத்குமார் மிரட்டுகிறார் என்று சொன்னால் அது மிகையாகாது. அவரது மகனாக வரும் தாகூர் அனூப் சிங்கும் கட்டுக்கோப்பான உடலுடன் சிறப்பாக நடித்திருக்கிறார்.


மற்றபடி நதியா, போமான் இரானி, ராவ் ரமேஷ் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் அவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கு வலுசேர்த்திருக்கின்றனர்.

தேசத்தை பாதுகாக்க எல்லைக்கு செல்லும் இராணுவ வீரர்கள், அவர்களது தேசப்பற்றை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார் வம்சி. நாட்டை பாதுகாக்க குடும்பத்தை விட்டு வீரர்கள் எல்லைக்கு செல்கின்றனர். ஆனால் இங்கே இருக்கும் உள்ளூர் தாதாக்கள், இங்குள்ள இளைஞர்களை தீவிரவாதிகளாக மாற்றி அவர்களை தீயவழிக்கு அனுப்புகின்றனர். கடைசியில் அவர்கள் எங்களுக்கு எதிராக தீவிரவாதிகளாக வந்து நிற்கிறார்கள். தீவிரவாதிகள் இங்கு தான் உருவாகுகிறார்கள். நாடு முதலில் ஒழுங்காக இருக்க வேண்டும் என்பதை படத்தில் சொல்லியிருக்கிறார். நாம் எப்படி இருந்தாலும், யாருக்காகவும், எதற்காகவும் நமது குணத்தை மட்டும் மாற்றக் கூடாது என்பதையும் படத்தில் சொல்லியிருக்கிறார்.

விஷால் தத்லானியின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். சேகர் ராவ்ஜியானியின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

மொத்தத்தில் `என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா’ விறுவிறுப்பு.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி