மெர்குரி – சினிமா விமர்சனம்


மெர்குரி (பாதரசம்) கழிவினால் பாதிக்கப்பட்ட இந்துஜா, சனத் ரெட்டி, அனிஷ் பத்மநாபன், தீபக் பரமேஷ், சஷாங்க் உள்ளிட்ட 5 பேருக்கும் காது கேட்காது. வாய் பேசவும் முடியாது. இவர்கள் 5 பேரும் மலைப்பிரதேசம் ஒன்றிற்கு கொண்டாட்டத்திற்காக வருகின்றனர். இதில் சனத், இந்துஜாவை காதலித்து வருகிறார். ஆனால் தனது காதலை நாயகியிடம் கூறவில்லை.

இந்நிலையில், இந்துஜாவிடம் தனது காதலை சொல்ல எண்ணி, சனத் அவளை காரில் வெளியில் கூட்டிச் செல்கிறார். அப்போது அவர்களது நண்பர்களும் உடன் செல்கின்றனர். இருப்பினும் ஒரு தனிமையான இடத்தில் வைத்து சனத் தனது காதலை சொல்ல, இந்துஜாவும் காதலை ஏற்றுக் கொள்கிறார்.

இதையடுத்து மீண்டும் வீட்டிற்கு திரும்பும் வேளையில், அவர்களது காரில் ஏதோ மாட்டிக் கொண்டிருப்பது போல அவர்களுக்கு தோன்ற, காரை நிறுத்தி பார்க்கும் போது, பிரபுதேவா உடம்பில் ஒரு சங்கிலி கட்டப்பட்டு, அதன் மறுமுனை காரில் மாட்டி, அவர் இழுத்து வரப்பட்டுள்ளார் என்பது தெரிய வருகிறது. அவரது உடலில் உயிர் இல்லாததால், அதிர்ச்சியடையும் நண்பர்கள், பிரச்சனையில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக அவரது உடலை எடுத்துச் செல்கின்றனர்.


பின்னர் அங்குள்ள மூடப்பட்ட பாதரச தொழிற்சாலையில் பிரபுதேவாவின் உடலை போட்டுவிட்டு திரும்புகிறார்கள். இந்நிலையில், அவர்களில் ஒருவரது ஐபாட் அந்த தொழிற்சாலையில் சிக்கிக் கொள்ள, அதை எடுக்க மீண்டும் அந்த தொழிற்சாலைக்கு போகும் போது, பிரபுதேவா உயிரோடு நிற்கிறார். அவரை பார்த்து நண்பர்கள் அனைவரும் மிரண்டு போகிறார்கள். பிரபுதேவா அவர்களை கொல்ல முயற்சி செய்கிறார்.

கடைசியில் கண் தெரியாத பிரபுதேவா அவர்களை கொன்றாரா? வாய் பேசமுடியாத, காது கேட்காத நண்பர்கள் 5 பேரும் பிரபுதேவாவிடம் இருந்து தப்பித்தார்களா? பிரபுதேவா எப்படி உயிரிழந்தார்? எப்படி உயிரோடு வந்தார்? அவரது வாழ்க்கையில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

கண்ணால் பார்க்க முடியாது என்றாலும், ஓசையினாலேயே அதிர வைத்திருக்கிறார் பிரபுதேவா. கண் தெரியவில்லை என்றாலும், அவர் பார்க்கும் அந்த பார்வை, செவியால் உணர்ந்து பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் பிரபுதேவா மிரட்டியிருக்கிறார். அவரது நடிப்பு படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. ரம்யா நம்பீசன் வரும் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது.

அதேபோல் நாயகி இந்துஜா, காது கேட்காத, வாய் பேச முடியாத கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அவரது செய்கையும், வாய் பேச முடியவில்லை என்றாலும், தான் சொல்ல நினைப்பதை செய்கையால் சொல்லி புரிய வைப்பதில் ரசிக்க வைத்திருக்கிறார். அதேபோல் சனத், அனிஷ், தீபக், சஷாங்க் உள்ளிட்ட அனைவருமே அவர்களது கதபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர்.


காது கேட்காத, வாய் பேச முடியாத 5 பேருக்கும், கண் தெரியாத ஒருவருக்கும் இடையே நடக்கும் மௌனப் போராட்டமாக இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். மௌனமாக துவங்கும் 5 பேரின் பயணம், எதிர்பாராமல் நடக்கும் விபத்தால் திசைமாறி, திகில் திருப்பங்களுடன் வந்து கடைசியில் மௌனத்தில் முடிவு என்ன, என்பதில் ரசிக்க வைத்திருக்கிறார். மௌனமே வலிமையான அலறல் என்பதை கார்த்திக் சுப்புராஜ் தனது பாணியில் நிரூபித்திருக்கிறார்.

மெர்குரி தொழிற்சாலையால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு, இதேபோல் மற்ற தொழிற்சாலைகளாலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்பதை கருத்துடன் சொல்லியிருக்கிறார். கார்ப்பரேட் நிறுவங்களால் மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் பாதிப்புகளையும் மறைமுகமாக சுட்டிக் காட்டியிருக்கிறார் என்று தான் கூற வேண்டும். ஒரு புதுமையான அனுபவத்தை கொடுத்திருக்கிறார். கார்த்திக் சுப்புராஜூக்கு வாழ்த்துக்கள்.

படத்தில் முக்கிய நாயகனாகவே வலம் வந்திருக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் என்று கூறினால் அது மிகையாகாது. அந்த அளவுக்கு இசையாலேயே பேசியிருக்கிறார். திகிலூட்டியிருக்கிறார். பரபரக்க வைத்திருக்கிறார்.

திருவின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. மலைப்பகுதி, பனி அடந்த இடம், தொழிற்சாலை என பல இடங்களில் பல பரிணாமங்கள் மூலம் காட்சிகளை ரசிக்க வைத்திருக்கிறார்.

மொத்தத்தில் `மெர்குரி’ திகில் போராட்டம்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி