எனக்கே இப்படினா ரஜினி கமலுக்கு சொல்லவா வேண்டும்..!! சிம்பு ஆவேசம்


கர்நாடகாவில் வசிக்கும் தமிழர்களுக்கு ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுத்து காவிரி நீரை தமிழகத்துடன் பகிர்ந்து கொள்ள தங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்பதை நிரூபிக்குமாறு சிம்பு கேட்டுக் கொண்டார். அவரின் கோரிக்கையை ஏற்று கர்நாடக மக்களும் தமிழர்களுக்கு ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுத்து வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.

அரசியலில் இல்லாத சிம்பு இப்படி ஒரு அருமையான காரியத்தை செய்துள்ளார். அரசியலில் இருக்கும் கமல் ஹாஸனும், பாதி அரசியல்வாதியான ரஜினியும் ஏன் இப்படி எதுவும் செய்யவில்லை என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் இது குறித்து சிம்பு பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார்.


சிம்பு பிரபல தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், கர்நாடக மக்கள் கெட்டவர்கள் இல்லை. மக்களின் பெயரை வைத்து காவிரி விவகாரத்தில் அரசியல்வாதிகள் உருவாக்கியுள்ள பிம்பத்தை உடைக்க நினைத்தேன். அரசியலுக்குள் இருக்கும் அரசியலை வெளியேற்ற வேண்டும் என்றார்.

சிம்பு மாதிரி ரஜினி, கமல் ஏன் சொல்லவில்லை என்று கேட்பதே தவறு. நான் சொன்னதற்கு நான் தமிழனே இல்லை என்றார்கள். தமிழ் தமிழ் என்று சொல்லும் நான், சிலம்பரசன் என்று பெயர் வைத்திருக்கும் நான், டி. ராஜேந்தர் மகனாக பிறந்த நான், ஜல்லிக்கட்டுக்கு குரல் கொடுக்க வேண்டும் என சொன்ன எனக்கே இந்த நிலைமை என்றால் அவர்களை சொல்லவா வேண்டும் என்றார் சிம்பு.


நீங்க தமிழனா என்று கேட்கிறார்கள், எனக்கு தெரியலப்பா. நான் இந்தியனா என்று கேள்வி எழுப்புறீங்க, எனக்கு தெரியலப்பா. ஆனால் ஒரு விஷயம் எனக்கு நன்கு தெரியும், நான் மனிதன். அது இல்லன்னு நிரூபித்தால் நீங்கள் சொல்வதை கேட்கிறேன் என்று சிம்பு கூறினார். நான் கமல் சார் கட்சியும் கிடையாது, ரஜினி சார் கட்சியும் கிடையாது. அவர்களால் அந்த விஷயத்தை எடுத்துச் சொல்ல முடியாது. ஏனென்றால் உடனே அரசியல் பக்கம் திருப்புவார்கள். அரசியலாக்கிவிடுவார்கள் என்று சிம்பு தெரிவித்தார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி