சிறு முதலீட்டுப் படங்களால் திரைத்தொழிலைக் காப்பாற்றும் நிலைமை..!! அதிர்ச்சியில் திரையுலகம்..!!


எழுபதுகளின் பிற்பாதியில் தமிழ்த் திரையுலகின் இந்தித் தாக்கம் மெல்லவே குறையத் தொடங்கியது. படத்தயாரிப்பிலிருந்து ஒதுங்கியிருந்த முதலாளிகள் பலரும் தொழில் நன்றாகச் சென்றமையால் படமெடுக்கத் திரும்பினர். தொடர்ந்து படமெடுத்துக்கொண்டிருந்த தயாரிப்பாளர்கள் இடைநிறுத்தம் செய்வது வழக்கம்தான். அதனால்தான் திரைத்துறை சார்ந்த ஒத்துழையாமைப் போராட்டங்கள் நடக்கும்போது திரையரங்கு உரிமையாளர்கள் படமுதலாளிகளோடு முரண்படுகின்றனர்.

‘திரையரங்கு உரிமையாளர்களாக நாங்கள் வெள்ளிக்கிழமை தவறாமல் ஒரு படத்தைத் திரையிட்டாகவேண்டும். படத்தை எடுக்கின்ற முதலாளிகளுக்கு அத்தகைய இக்கட்டுகள் எவையும் இல்லை. விரும்பினால் ஒரு படத்தை எடுக்கலாம். அவர் விரும்பாவிட்டால் ஆண்டுக்கணக்கில்கூட படத்தை எடுக்காமல் இருக்கலாம். மீண்டும் அவர் எப்போது நினைத்தாலும் படமெடுக்க வரலாம். எங்கள் நிலைமை அவ்வாறில்லை. வெள்ளிக்கிழமை தவறாமல் புதுப்படத்தைத் திரையிடாவிட்டால் எங்கள் அரங்குகளுக்கு வருகின்ற கூட்டத்தை நாங்கள் இழக்கவேண்டியிருக்கும். வாழ்வோ சாவோ நாங்கள் தொழிலில் தொடர்ந்து இருந்தாக வேண்டும். படத்தை எடுத்து விற்கின்ற முதலாளிகளுக்கு அந்தக் கட்டாயம் இல்லை,’ என்று திரையரங்க உரிமையாளர்கள் எப்போதும் கூறி வருகின்றார்கள்.


எழுபதுகளில் பற்பல திரைப்பட நிறுவனங்கள் தொழிலிலிருந்து ஒதுங்கிக்கொண்டதை அவர்கள் மறந்திருக்க மாட்டார்கள். அந்நேரத்தில் திரைத்துறையை வாழ வைத்தவர்கள் சிறிய தயாரிப்பாளர்கள்தாம். அவர்கள்தாம் தங்கள் ஆற்றலுக்கு மீறிய எல்லா இடர்ப்பாடுகளையும் எதிர்கொண்டு ஒரு படத்தை உருவாக்கினார்கள். அன்றைய சிறு முதலீட்டாளர்களால்தாம் அந்தப் பேரிடைவெளி நிரப்பப்பட்டது.

பட நிறுவனமாகத் தொடர்ந்து செயல்பட்டு வளர்வது அருஞ்செயல்தான். ஆனால், வளர்ந்த பிறகு சிறிய பொருட்செலவினால் எடுக்கக்கூடிய படங்களைத் தவிர்க்கிறார்கள். எவ்வொரு வளர்ச்சியும் சிறிதாய் இருந்து பெரிதாய் ஆவதுதான். ஆனால், சிறு சிறு படங்களால் வளர்ந்த அம்முதலாளிகள் பெரும்பொருட் செலவினால் ஆன படங்களை எடுத்தே ஆகவேண்டும் என்பது வாணிக நெருக்கடி.

எடுத்துக்காட்டாக, எழுபதுகளின் நிலவரத்தை வைத்துச் சொல்கிறேன், ஒரு சிறிய படத்தை இரண்டு மூன்று இலட்சங்களுக்குள் எடுத்து முடித்து ஐந்தாறு இலட்சங்களுக்குள் விற்று அடையக்கூடிய வரவு குறித்து பெரிய பட நிறுவனங்களுக்கு ஆர்வமே இருப்பதில்லை. ஆனால், சிறிய படங்களை எடுக்க முனைவோரின் ஆர்வம் அந்தச் சிறிய பரப்புத்தான். இடுகின்ற முதலுக்கு இரட்டையாகத் திரும்பி வந்தாலே அது நூறு விழுக்காடு வரவாயிற்றே. எந்தத் தொழிலில் அவ்வளவு ஈட்ட முடியும் ? படத்தொழிலில்தான் ஈட்ட முடியும். அவ்வாறே திரைத்தொழிலின் இன்னொரு வாய்ப்பு, பத்து உரூபாய்க்கு உருவாக்குகின்ற அதே பொருளை நூறு உரூபாய்க்கும் உருவாக்க முடியும். சிறிய படமாக எடுக்கப்படவேண்டிய கதையொன்று, பெரிய முதலாளியிடம் சிக்கினால் அதை அவர் பெரிய படமாகத்தான் எடுத்துக்காட்டுவார். நல்ல கதைக்கு அவ்வளவு ஊட்டங்கள் தரப்படவேண்டும் என்பது அவருடைய பட்டறிவு. ஆனால், சிறு முதலாளி அதற்கு எதிரான நடவடிக்கையையே மேற்கொள்வார். எது எப்படியிருந்தாலும் தம்மிடமுள்ள பொருளளவுக்குள் அதைப் படமாக்கிவிடக்கூடிய வாய்ப்புகளையே ஆராய்வார். இங்கே பெரிய முதலாளியிடம் அவர்க்குள்ள வாணிக வலைப்பின்னல் உதவுவதைப்போல, சிறு முதலாளியிடம் அவருடைய கதையின் வெற்றி வாய்ப்பு உதவுகிறது.


தொடக்கத்தில் எவ்வொரு முதலாளியும் சிறிய படங்களையே எடுக்கத் தொடங்குவார். அது முழுக்கவே அவருடைய முதலாக இருக்காது. தம்மிடமிருந்து கொஞ்சம் தொகையையும் பிறவற்றைக் கடன்வாங்கியும் ஒரு படத்தை எடுப்பார். போட்ட முதல் திரும்பி வந்தால்கூடப் போதும், தொழிலில் இருக்கிறோம் என்ற நிறைவு கிடைத்தது என்று நினைப்பார். ஆனால், அவருடைய நன்னேரமோ, புதிதாய்க் கிடைத்த இயக்குநரின் திறமையோ… அவருடைய படம் நினைத்துப் பார்க்க முடியாத வெற்றியைப் பெற்றுவிடும். ‘அடடே… திரைப்படத் தொழில் இவ்வளவுதானா…’ என்கின்ற மேம்போக்கான மனநிலை வளர்ந்துவிடும். அடுத்தடுத்த படங்களில் தாம் எண்ணியவற்றை எல்லாம் செய்வார். ஏதேனும் தற்செயல் வாய்ப்புகளால், அல்லது தொழிற்போக்குகளால் அவருடைய அடுத்தடுத்த படங்களில் சிலவும் வெற்றி பெறக்கூடும். அதன்பிறகு அவர் தொழிலைச் செய்வது மாறி, தொழில் அவரைச் செய்துகொண்டிருக்கும். ‘இந்தத் தொழிற்சூழலிலிருந்து தப்பியோடுவதற்கு வழியில்லாமல்தான் இத்தொழிலைச் செய்துகொண்டிருக்கிறேன்,’ என்று கூறுகின்ற பலரைப் பார்த்துவிட்டேன். திரைத் தொழிலில் இருப்பவருடைய நிலைமையும் அஃதே.

தொழிற்போக்குகள் பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறுபவை. அது மக்களின் மனநிலை, சுவைப்புநிலை ஆகியவற்றுக்கும் பொருந்தும். தன்னைத் தொடர்ந்து உருவேற்றிக்கொள்ளாதவர்கள் தேங்கிப் போய்விடுவார்கள். பத்தாண்டுகளுக்கு ஒருமுறை திரைத்துறையில் புதிய வரவுகளின் அலையடிப்பதைப் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்?


சிறிய படங்களை எடுத்த முதலாளி மெல்ல வளர்ந்து பெரிய நிறுவனமாகியிருப்பார். அவருடைய வளர்ச்சிக்கு அவருடைய அனைத்து நற்குணங்களும் ஆட்சித் திறமையும் காரணங்கள் என்பதை மறுப்பதற்கில்லை. அவ்வாறு வளர்ந்துவிட்ட பெரிய நிறுவனம் தன்னுடைய விளைபொருளையும் பெரிய மதிப்பில்தான் உருவாக்கும். நூறு உரூபாயில் விளைவித்து நூற்றைம்பதுக்கு விற்பது சிறு முதலாளிகளின் தொழிற்பாடு என்றால் ஐந்நூறு உரூபாய்க்கு விளைவித்து ஆயிரத்து ஐந்நூற்றுக்கு விற்பது பெரிய முதலாளிகளின் தொழில்முறை. பெரிய நிறுவனம் என்பதால் எவ்வளவு இழப்பு என்றாலும் ஐந்நூற்றில் முந்நூறு திரும்பி வந்துவிடும். வெற்றி என்றால் ஆயிரத்தைந்நூறாகக் கிடைக்கும். சிறிய தயாரிப்பாளர்க்குத் தோல்வி என்றால் இடுமுதல் நூறும் போய்விடும். வேறுபாட்டைப் பாருங்கள், சிறிய முதலாளிக்கு இடுமுதல் நூறு, இழப்பென்றால் நூறு. பெரிய முதலாளிக்கு இடுமுதல் ஐந்நூறு, இழப்பென்றால் இருநூறு. எப்படிப் பார்த்தாலும் பெரிய முதலாளி தொழிலின் அனைத்து நலன்களையும் பெற வல்லவராக இருக்கிறார். சிறிய முதலாளிதான் தன்னுடைய தொழில் வேட்கைக்காகவே அத்தொழிலில் ஈடுபட்டவராகிறார். வரலாறு முழுக்கவே திரைத்தொழிலைச் சிறிய முதலாளிகளே தாங்கிப் பிடித்து வந்திருக்கிறார்கள். சிறு முதலீட்டுப் படங்களால்தாம் திரைத்தொழில் சரிவடையாமல் தொடர்கிறது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி