பிரகாஷ் ராஜ் கால்பட்ட இடத்தை கோமியத்தால் சுத்தம் செய்த கல்லூரி மாணவர்கள்

கே.பாலச்சந்தர் இயக்கிய டூயட் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமான பிரகாஷ் ராஜ், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்பட பல மொழிகளில் நடித்து வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளாகவே பா.ஜ.கவையும் பிரதமர் நரேந்திர மோடியும் விமர்சித்து கருத்துகளை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில். கர்நாடகா மாநிலம் சிவமொக்காவில் உள்ள தனியார் கல்லூரியில் தியேட்டர் வசனம், சினிமா, சமூகம் என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், நடிகர் பிரகாஷ் ராஜ் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். இதனை அறிந்த மாணவர்கள் சிலர் கல்லூரிக்கு தொடர்பில்லாத தனியார் நிகழ்ச்சியை எப்படி கல்லூரி வளாகத்திற்குள் நடத்தலாம் என கேள்வி எழுப்பியதோடு, நடிகர் பிரகாஷ் ராஜ் வருகைக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் கல்லூரிக்கு வரக்கூடாது என போராட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது.

பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மாணவர்கள் கல்லூரிக்குள் நுழையாமல் இருக்க தடுப்பு அமைத்து பாதுகாப்பில் ஈடுப்பட்டதால் மாணவர்களுக்கு போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, நிகழ்ச்சி முடிந்து நடிகர் பிரகாஷ் ராஜ் கல்லூரியை விட்டு வெளியே சென்றதும் மாணவர்களில் சிலர் கோமியம் எடுத்து சென்று அவர் சென்ற இடங்களில் தெளித்து சுத்தம் செய்துள்ளனர். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!