பொன்னியின் செல்வன் 2 – விமர்சனம்

அருண்மொழி வர்மன் (ஜெயம் ரவி) மற்றும் வந்தியத்தேவன் (கார்த்தி) சிலரின் சூழ்ச்சியால் கடலில் சிக்கி உயிழப்பது போன்ற காட்சியுடன் முதல் பாகம் முடிவடைந்தது. இந்நிலையில் சோழ பேரரசை சார்ந்த ஆதித்த கரிகாலனுக்கும் (விக்ரம்), குந்தவைக்கும் (திரிஷா) தனது தம்பி உயிருடன் இருக்கும் செய்தி தெரிய வருகிறது. கடலில் சிக்கிய அவரை வயது முதிர்ந்த ஊமை ராணி என்ற பெண் காப்பாற்றுகிறார். அவரை காப்பாற்றிய ஊமை ராணி யார் என்ற உண்மையை தனது தந்தை சுந்தர சோழரிடம் (பிரகாஷ் ராஜ்) குந்தவை கேட்டு தெரிந்துக் கொள்ள முயற்சிக்கிறார்.

மறுபுறம் அருண்மொழி வர்மன் உயிருடன் இருப்பதை தெரிந்து கொள்ளும் எதிரிகள் அவரை எப்படியாவது தீர்த்து கட்ட முடிவு செய்கின்றனர். இதனிடையே சோழ ராஜ்ஜியத்தில் முடிசூட வேண்டும் என்று மதுராந்தகன் (ரஹ்மான்), சோழ பேரரசை எதிர்த்து களம் காண நினைக்கிறார். இது ஒருபுறம் நடக்க, ஆதித்த கரிகாலனை பழிவாங்க அவரை தனியே சந்திக்க நந்தினி (ஐஸ்வர்யா ராய்) திட்டம் தீட்டுகிறார். இறுதியில் நந்தினியின் திட்டம் நிறைவேறியதா? எதிரிகளிடம் இருந்து அருண்மொழி வர்மன் தப்பித்தாரா? ஆதித்த கரிகாலன் நந்தினியின் வலையில் சிக்கினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

அருண்மொழி வர்மனாக வரும் ஜெயம் ரவி, யதார்த்தமாக நடித்து கைத்தட்டல் வாங்கி இருக்கிறார். ராஜ்ஜியத்தை கையாளும் விதத்திலும், சூழ்ச்சிகளில் இருந்து தப்பிக்கும் காட்சிகளிலும் ஸ்கோர் செய்து இருக்கிறார். குறிப்பாக இறுதி காட்சியில் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். ஆதித்த கரிகாலனாக நடித்திருக்கும் விக்ரம் திரையில் மிரள வைத்துள்ளார். தனது முன்னாள் காதலியை சந்தித்து பேசும் இடங்களில் உருகவைத்துள்ளார். தம்பி, தங்கை பாசம் காட்டி நெகிழ வைத்துள்ளார். வந்தியத்தேவனாக வரும் கார்த்தி பல உணர்வுகளை பார்வையாளர்களுக்கு கடத்தி ரசிக்க வைத்துள்ளார். இவரின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம்.

இவர் வரும் காட்சிகளில் திரைக்கதை வேகமெடுக்கிறது. நந்தினியாக வரும் ஐஸ்வர்யா ராய் பழிவாங்க துடிக்கும் இடங்களில் பிரம்மிக்க வைத்துள்ளார். தனது தாயை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டும் இடங்களில் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதுபோல், குற்றத்தை உணர்ந்து வருந்தும் காட்சிகளில் கலங்க வைத்துள்ளார். குந்தவையாக வரும் திரிஷா, திரையில் ரசிகர்களை அழகால் ஈர்த்துள்ளார்.

அவர் அணிந்திருக்கும் அணிகலன்கள், உடைகள் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆழ்வார்கடியன் நம்பி (ஜெயராம்) தோன்றும் இடங்களில் ரசிக்க வைத்துள்ளார். மேலும் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, சரத்குமார், சோபிதா துதிபாலா, விக்ரம் பிரபு, பார்த்திபன், பிரபு, ரஹ்மான் என படத்தில் நடித்திருக்கும் அத்தனை நடிகர்களும் அவர்களின் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளனர். கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை திரைக்கதையின் மூலம் அழகுப்படுத்தி தன்னை மீண்டும் நிரூபித்துள்ளார் இயக்குனர் மணிரத்னம். இரண்டாம் பாகத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களையும் சிறப்பாக கையாண்டுள்ளார். படத்தில் நடித்திருக்கும் அத்தனை நடிகர்களுக்கும் சரியான காட்சிகளை அமைத்து கைத்தட்டல் பெறுகிறார்.

வரலாற்று பின்னணியை விறுவிறுப்பு குறையாமல் கொடுத்து பாராட்டுக்களை பெற்றிருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். கார்த்தி மற்றும் திரிஷா தனியே பேசும் ஒரு காட்சி, விக்ரம், ஐஸ்வர்யா ராய் இருவரும் பேசும் காட்சி ஆகியவை வெளியே வந்த பிறகும் மனதில் நிற்கிறது. ரவிவர்மனின் ஒளிப்பதிவு அட்டகாசம். காட்சிகளை அழகாக வடிவமைத்து அந்த களத்திற்கே பயணிக்க வைத்திருக்கிறார். ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசை படத்தின் விறுவிறுப்பை கூட்டியுள்ளது. சில நிமிடங்கள் தோன்றும் பாடல்கள் முணுமுணுக்க வைக்கிறது. மொத்தத்தில் பொன்னியின் செல்வன் -2 – வரலாற்று பதிவு.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!