வலியை மகிழ்ச்சியாக எடுத்துக்கொள்பவர்களின் உயரம் பெரியதாக இருக்கும் – சிம்பு

சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘பத்து தல’. இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இப்படம் வருகிற 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதைத் தொடர்ந்து படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இதையடுத்து ‘பத்து தல’ படக்குழு இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இதில், நடிகர் சிம்பு பேசியதாவது, “இந்த படத்தில் எல்லாருக்கும் அவர்களுடைய கதாபாத்திரத்திற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை இயக்குனர் கிருஷ்ணா நல்ல செய்திருக்கிறார். நான் கடைசியாக விக்ரம் படத்தில் தான் பார்த்தேன், ஒவ்வொரு நடிகர்களுக்கும் சரியாக அவர்களுக்கான இடம் கொடுத்த ஒரு திரைப்படம் அது. அந்த மாதிரி இந்த படத்திலும் எல்லோருக்கும் ஒரு முக்கியத்துவம் இருக்கும்.

நான் இயக்குனரிடம் அடிக்கடி கூறுவேன் கவுதமுக்கு எதாவது ஷாட் கொடுங்கள் என்று அதற்கு இயக்குனர் எல்லோருக்கு சமமான ஷாட் தான் இருக்கிறது நீங்கள் பயப்படவேண்டாம் என்று எனக்கு அறிவுரை கூறுவார். இப்போது படம் பார்க்கும் போது தான் தெரிகிறது அவர் மிகவும் அருமையாக இயக்கியிருக்கிறார். இந்த படம் இயக்குனரை மேலும் மேலும் ஒரு இடத்திற்கு கொண்டு போகும் என்று நம்புகிறேன்.

எல்லாரும் சொல்லுவார்கள் கவுதம் கார்த்திக் மிகவும் கஷ்டப்பட்டாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார் என்று அந்த அளவிற்கு ஒரு வலியையும் ஜாலியாக எடுத்துக்கொள்பவர்கள் வாழ்க்கையில் தோற்றுப்போக வாய்ப்பேயில்லை, கண்டிப்பாக அவர்களது உயரம் பெரியதாக தான் இருக்கும். ஒரு ஹீரோ ஆக்ஷனில் ஈர்ப்பது ரொம்ப கஷ்டம் அதை மிகவும் சுலபமாக கவுதம் செய்வதை நான் அருகில் இருந்து பார்த்தேன். நான் அவரது ஆக்ஷனை ரசித்தேன். என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று ஆக்ஷன் செய்வதை நான் கவுதமிடம் பார்த்தேன். ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் ‘பத்து தல’ படத்திற்காக நிறைய உழைத்திருக்கிறார். அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!