சினிமாவில் 13 ஆண்டுகளை கடந்த சமந்தா – டுவிட்டரில் நெகிழ்ச்சி பதிவு

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா படப்பிடிப்புகளில் பிசியாக பங்கேற்று நடித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் இந்த நோய் குணமாக சிறிது காலம் ஆகும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார். இது திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமந்தா விரைவில் குணமடைய வாழ்த்தினர். சிகிச்சை பெற்று வந்ததால் சில மாதங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த சமந்தா தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.

சமந்தா நடிப்பில் சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள சாகுந்தலம் திரைப்படம் 5 மொழிகளில் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா நடித்துவந்த ‘குஷி’ படத்தின் படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் சமந்தா சினிமாவில் நடிக்கத் தொடங்கி தற்போது 13 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளார். தமிழில் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் நந்தினி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த 2010 ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி வெளியானது. இந்த நிலையில் சமந்தா தன்னுடைய 13 ஆண்டுகால திரைப்பயணத்தை பூர்த்தி செய்துள்ளார். இதையடுத்து அவரது ரசிகர்கள் சமந்தாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக நடிகை சமந்தா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த அன்பை நான் உணர்கிறேன்… இதுதான் என்னை தொடர வைக்கிறது… இப்போதும் என்றும், நான் என்னவாக இருக்கிறேன் என்பது உங்களால் தான். 13 ஆண்டுகள், நாம் இப்போதுதான் தொடங்குகிறோம்” என்று கூறியுள்ளார்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!