மறைந்த பழம்பெரும் நடிகர் ஜெய்சங்கர் வாழ்க்கை சினிமா படமாகிறது

நடிகர், நடிகைகளின் வாழ்க்கை ஏற்கனவே சினிமா படங்களாக வந்து வரவேற்பை பெற்றுள்ளன. மறைந்த ஆந்திர முதல் மந்திரியும் தெலுங்கு நடிகருமான என்.டி.ராமராவ், ஏராளமான படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, நடிகைகள் சில்க் ஸ்சுமிதா, சாவித்திரி, இந்தி நடிகர் சஞ்சய் தத் வாழ்க்கை படங்கள் வந்துள்ளன. சமீபத்தில் மரணம் அடைந்த ஜமுனா வாழ்க்கையும் சினிமா படமாகிறது. இதில் ஜமுனா கதாபாத்திரத்தில் நடிக்க தமன்னாவிடம் பேசி வருகிறார்கள். நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கையும் படமாக உள்ளது. இந்த நிலையில் மறைந்த பழம்பெரும் நடிகர் ஜெய்சங்கர் வாழ்க்கையையும் சினிமா படமாக எடுக்கும் முயற்சிகள் நடக்கின்றன.

இதுகுறித்து ஜெய்சங்கரின் மகன் சஞ்சய் சங்கர் கூறும்போது, “நிறைய பேர் எனது தந்தை ஜெய்சங்கர் வாழ்க்கையை படமாக எடுக்க கேட்கிறார்கள். இதனால் எங்களுக்கும் ஆர்வம் வந்துள்ளது. அதற்கான நேரம் அமையும்போது படமாக எடுப்போம்” என்றார். ஜெய்சங்கர் 1965-ல் வெளியான இரவும் பகலும் படத்தில் அறிமுகமாகி 1990-கள் வரை முன்னூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி கதாநாயகனாக வலம் வந்தார். தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். குணசித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். முரட்டுக்காளை படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தார். ஜெய்சங்கரை ‘தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட்’ என்று அழைத்தனர்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!