துனிசாவை முன்பு தற்கொலையில் இருந்து காப்பாற்றினேன் – ஷீசன் கான் வாக்குமூலம்

மராட்டிய தலைநகர் மும்பையை அடுத்த பால்கர் மாவட்டம் வசாய் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் பிரபல தொலைக்காட்சி நடிகை துனிசா ஷர்மா (வயது 20). மகாரானா பிரதாப் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆன இவர் இஸ்க், சுப்ஹான் அல்லா, கப்பர் பூஞ்ச்வாலா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார்.

பிதூர், பார்பார் தேக்கோ, கஹானி-2; துர்கா ராணி சிங், தபாங்-3 உள்ளிட்ட இந்தி படங்களிலும் நடித்துள்ள இவர் அலிபாபா தஸ்தான்-இ-காபூல் என்ற தொலைக்காட்சி தொடருக்கான படப்பிடிப்பின் தேனீர் இடைவேளையின் போது மேக்கப் அறைக்கு சென்று வெகுநேரம் ஆகியும் அவர் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த படப்பிடிப்பு நிர்வாகிகள் அறைக்கு சென்றபோது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரமாக தட்டியும் கதவு திறக்கப்படவில்லை.

இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்றபோது அங்கு துனிசா ஷர்மா மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கினார். அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து துனிசா ஷர்மாவின் தாயார் இதுதொடர்பாக வாலிவ் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் துனிசா ஷர்மாவை அவருடன் நடித்த நடிகர் ஷீசன் முகமது கான் என்பவர் தற்கொலைக்கு தூண்டியதாக குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் துனிசா ஷர்மாவை தற்கொலைக்கு தூண்டியதாக ஷீசன் முகமது கான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் ஷீசன் முகமது கானை 4 நாட்கள் போலீஸ் காவலுக்கு கொண்டு செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. போலீஸ் விசாரணையில் அவர் கூறியதாவது, “ஷ்ரத்தா வாக்கர் கொடூர சம்பவத்திற்கு பின்னர், நாட்டில் காணப்படும் சூழ்நிலை மற்றும் பின்விளைவுகளை பார்த்தும் நமக்கு முன்பு தடங்கலாக உள்ள வெவ்வேறு சமூகம், வயது வித்தியாசம் ஆகியவற்றையும் துனிசாவிடம் எடுத்து கூறினேன்.

அதனால், இந்த உறவை முறித்து கொள்ள முடிவு செய்தேன் என்று போலீசில் கூறியுள்ளார். மேலும், துனிசா தற்கொலை செய்து கொள்வதற்கு சில நாட்களுக்கு முன்பு அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் அந்த நேரத்தில் நான் தான் அவரை காப்பாற்றினேன் என்றும் ஷீசன் முகமது கான் கூறியுள்ளார். துனிசா மற்றும் ஷீசன் கான் போன்கள் தடவியல் ஆராய்ச்சிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.





  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!