சிவகார்த்திகேயனுக்கு எதிரான வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்திற்காக கே.ஜே.ஆர். ஸ்டுடியோ நிறுவனம் பெற்ற ரூ. 5 கோடியை வட்டியுடன் சேர்த்து ரூ. 6.92 கோடியாக வழங்க கோரி 2019-ல் டேக் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இதைத்தொடர்ந்து கே.ஜே.ஆர். ஸ்டுடியோ நிறுவனம் பணத்தை திருப்பித் தராததால், ப்ரின்ஸ் திரைப்படத்திற்கு சிவகார்த்திகேயன் பெற்ற சம்பளத்தை நீதிமன்றத்தில் செலுத்த உத்தரவிட வேண்டும் என டேக் நிறுவனம் கூடுதல் மனு தாக்கல் செய்தது.

இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்த போது, டேக் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தரப்பில் 2019-ஆம் ஆண்டு முதல் வழக்கு நிலுவையில் உள்ளதாலும், அயலான், டான், டாக்டர் போன்ற படங்களின் தயாரிப்பு பணிகளில் சிவகார்த்திகேயன் ஈடுபட்டுள்ளதால், ப்ரின்ஸ் படத்தில் பெற்ற வருமானத்தை இந்த வழக்கின் கணக்கில் செலுத்தும்படி உத்திரவிட வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.

சிவகார்த்திகேயன் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி, ப்ரின்ஸ் படத்தில் நடிகர் என்ற முறையில் சம்பளம் பெற்றுக் கொண்டு நடித்ததாகவும், தயாரிப்பு பணிகளுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்தார். திரைத்துறையில் உள்ள நற்பெயரை கெடுக்கும் நோக்கத்துடனும், துன்புறுத்தும் வகையிலும் இந்த மனுவை டேக் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தாக்கல் செய்துள்ளதால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு, சான்றிதழ்களை ஆராய்ந்த நீதிபதி ப்ரின்ஸ் படத்தின் தயாரிப்பு பணிக்கும், சிவகார்த்திகேயனுக்கும் தொடர்பு இல்லை என்பது உறுதி செய்யப்படுவதால், அவரது சம்பளத்தை நீதிமன்றத்தில் செலுத்த உத்தரவிட முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.








  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!