அவரின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கும் எண்ணம் இல்லை – சுதா கொங்கரா

2010-ம் ஆண்டு ஸ்ரீகாந்த் மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான துரோகி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் சுதா கொங்கரா. அதன்பின்னர் மாதவன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பில் வெளியான இறுதி சுற்று படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். இவர் சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று படத்தை இயக்கி பலரின் பாராட்டுக்களையும் பெற்றார்.

இப்படம் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் ஏராளமான விருதுகளை குவித்ததோடு, 5 தேசிய விருதுகளையும் தட்டி சென்றது.

சில தினங்களாக பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாற்றை சுதா கொங்கரா திரைப்படமாக இயக்கவுள்ளதாக இணையத்தில் பேசப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து சுதா கொங்கரா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நான் திரு. ரத்தன் டாடாவின் மிகப்பெரிய ரசிகர். ஆனால், அவரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கும் எண்ணம் எனக்கு இப்போதைக்கு இல்லை. ஆனால் எனது அடுத்த படத்தின் மீதுள்ள உங்கள் ஆர்வத்திற்கு நன்றி! விரைவில்! என்று பதிவிட்டுள்ளார். இதன்மூலமாக சுதா கொங்கராவுக்கு ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாற்றை படக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என தெளிவாகியுள்ளது.






  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!