செஞ்சி – விமர்சனம்

பிரான்சில் இருந்து புதுச்சேரியில் உள்ள தனது மூதாதையர் வீட்டுக்கு வரும் கெசன்யா அங்கு ஒரு அறைக்குள் பழைய புராதன கலைப் பொருட்கள் இருப்பதை பார்த்து ஆச்சரியப்படுகிறார். அவற்றோடு அமானுஷ்யங்களும் இருக்கின்றன. ஒரு ஓலைச்சுவடியை ஆவிகள் சுற்றுகின்றன. அந்த ஓலைச்சுவடியை எடுத்து தொல்பொருள் ஆராய்ச்சி செய்யும் கணேஷ் சந்திரசேகரிடம் (ஜாக் ஆண்டர்சன்) காட்டுகிறார். அவர் ஓலைச்சுவடியை படித்து புதையல் பற்றிய ரகசிய குறிப்புகள் இருப்பதை கண்டுபிடிக்கிறார். 

ரகசிய குறிப்பு குறியீடுகளை வைத்து புதையலை தேடி சோபியாவுடன் புறப்படுகிறார். புதையல் வேட்டைக்கான பாதையில் ஐந்து தடயங்கள் உள்ளதாகக் அந்த குறிப்புகள் கூறுகின்றன. ஐந்தையும் ஒவ்வொன்றாக அடைந்து ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று இறுதியில் அந்தப் புதையலை கண்டுபிடித்தார்களா? இல்லையா? வழியில் ஏற்படும் பிரச்சனைகள் என்ன? அதை எப்படி சமாளிக்கின்றனர்? என்பதே படத்தின் மீதிக்கதை.

புதையல் வேட்டையாக தொடங்கும் கதையில் இரண்டு கிளைக்கதைகளும் வருகின்றன. கிராமத்தில் ரகளை செய்யும் ஐந்து சிறுவர்களால் அவர்கள் குடும்பத்தினரை ஊரை வீட்டே ஒதுக்கி வைக்கின்றனர். இதனால் பெற்றோர் கண்டிப்புக்கு உள்ளாகும் அந்த சிறுவர்கள் வீட்டை விட்டு வெளியேறி காட்டுக்குள் செல்கிறார்கள். பயங்கரவாதிகள் சிலரும் துப்பாக்கியுடன் காட்டில் சுற்றுகின்றனர். அவர்களை பிடிக்க அதிரடி படை காட்டுக்குள் இறங்குகிறது. இந்த மூன்று கதைகளையும் ஒரு புள்ளியில் இணைக்க முயற்சிருப்பதே செஞ்சி படம்.

தொல்பொருள் ஆராய்ச்சியாளராக வரும் கணேஷ் சந்திரசேகர் நடிப்பில் கவனம் செலுத்தியிருக்கலாம். இவரின் வசன உச்சரிப்பில் இன்னமும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். பிரான்சு பெண்ணாக வரும் கெசன்யா கதையோடு ஒன்றியிருக்கிறார். படத்தில் வரும் கதாப்பாத்திர தேர்வை சரியாக செய்திருக்கலாம். படத்தில் சுட்டித்தனம் செய்யும் ஐந்து சிறுவர்களாக வரும் சாய் ஸ்ரீனிவாசன், தர்சன் குமார், விதேஷ் ஆனந்த், சஞ்சய், தீக்ஷன்யா அழகாக நடித்துள்ளனர்.

கணேஷ் சந்திரசேகர் அவரே நடித்து இயக்கி இருப்பதால் கதை, திரைக்கதை, நடிப்பு அனைத்திலும் கவனம் சிதறியிருக்கிறார். முதல் பாதி பொறுமையாக நகர்வதால் விறுவிறுப்பு இல்லாம் இருக்கிறது. திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ஒரே நேரத்தில் ஆங்கிலத்திலும் தமிழிலும் வசனம் வருவதைத் தவிர்த்திருக்கலாம்.

செஞ்சி, மதுரை, ராஜபாளையம், தென்காசி, கல்லார் போன்ற இடங்களை பார்வையாளர்களுக்கு காண்பிக்க முயற்சித்திருக்கிறார்கள். படத்தின் ஒளிப்பதிவில் உழைத்திருக்கலாம். படத்தின் பாடல்கள் கேட்கும்படி இல்லை. இசையமைப்பாளர் எல்.வி.முத்து கணேஷின் பின்னணி இசை பரவாயில்லை. மொத்தத்தில் செஞ்சி – பொலிவில்லை.






  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!