நான் அரசியல் பேசுவதால் என்னுடன் சேர்ந்து நடிக்க பயப்படுகிறார்கள்- பிரகாஷ் ராஜ்

தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் வில்லனாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்து பிரபலமான பிரகாஷ்ராஜ், சமீப காலமாக அரசியல் பற்றி துணிச்சலாக பேசி வருகிறார். குறிப்பாக பா.ஜனதா கட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் பிரகாஷ்ராஜ் அளித்துள்ள பேட்டியில், ”சமீப காலமாக நான் அரசியலில் தீவிரம் காட்டி வருகிறேன். இதனால் ஒரு காலத்தில் என்னோடு இணைந்து நடித்தவர்கள் இப்போது சேர்ந்து நடிக்க ஆர்வம் காட்டுவதில்லை. நான் அரசியல் பேசுவதால் என்னுடன் நடிக்க பயப்படுகிறார்கள்.

என்னோடு நடித்தால் அவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டோர்களோ என்ற அச்சம் அவர்களுக்கு உள்ளது. அந்த பயத்தோடு என்னை விட்டு அவர்கள் விலகுகிறார்கள். இது என் சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதற்காக நான் வருந்தவில்லை. அப்படிப்பட்டவர்களை இழக்க நான் தயாராகவே இருக்கிறேன். எப்படிப்பட்ட விளைவுகளையும் சந்திக்க தயாராக இருக்கிறேன். இப்போதுதான் நான் மேலும் சுதந்திரமாக இருப்பதாக நினைக்கிறேன். எனது குரலை ஒலிக்கச் செய்யாவிட்டால் ஒரு நடிகனாக மட்டுமே இறந்து விடுவேன். நிறைய நடிகர்கள் மவுனமாக இருக்கிறார்கள். அவர்களை குறை கூற விரும்பவில்லை. ஒரு வேளை அவர்கள் பேசினால் அதனால் வரும் விளைவுகளை அவர்களால் தாங்க முடியாது” என்றார்.



  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!