நான் இன்னும் சாகவில்லை.. நோயை எதிர்த்து போராடுகிறேன்- நடிகை சமந்தா பரபரப்பு பேட்டி

இயக்குனர் ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள படம் ‘யசோதா’. பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திரில்லர் வகை கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் சமந்தா எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

‘யசோதா’ படத்தை சிவலெங்க கிருஷ்ண பிரசாத் தனது ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். மணிஷர்மா இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி வைரலானது. இதனிடையே நடிகை சமந்தா சிகிச்சை எடுத்துக் கொண்டு டப்பிங் பேசிய புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நடிகை சமந்தா யசோதா படத்தின் ரிலீஸை முன்னிட்டு பல்வேறு புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார். இதற்கான பிரத்யேக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்படம் தொடர்பான நேர்காணில் பேசிய சமந்தா தனது உடல்நலம் குறித்து பேசியுள்ளார்.

அதில், “நோயினால் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளேன். நான் முன்பு சொன்னது போலவே சில நாட்கள் கடினமாக உள்ளது. என்னால் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை. படுக்கையில் இருந்து கூட எழ முடியவில்லை. சில நேரம் திரும்பி பார்த்தால் ரொம்ப தூரம் வந்து விட்டதுபோல் உணர்கிறேன். இந்த நோய்க்கு எதிராக போராட வேண்டிய நிலையில் இருக்கிறேன். நிறைய மருந்து எடுத்துக்கொள்கிறேன். இதனால் சோர்வாக இருக்கிறது. நான் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக வெளியான செய்திகளை பார்த்தேன். அப்படி இல்லை. உயிரோடுதான் இருக்கிறேன். நான் எப்போதும் ஒரு போராளியாகவே இருந்துள்ளேன். இந்த நோயை எதிர்த்தும் போராடுவேன்” என்று கண்கலங்கி பேசினார்.

யசோதா திரைப்படம் நவம்பர் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!