ஜேம்ஸ்பாண்ட் படம் மாதிரி பிகினியும் சிக்ஸ் பேக்கும் இருக்குமா? என்று கேட்காதீர்கள் – நடிகர் கார்த்தி

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘சர்தார்’. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். மேலும், ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். ‘சர்தார்’ திரைப்படம் இந்த வருடம் அக்டோபர் மாதம் 21-ம் தேதி ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் கார்த்தி பேசியதாவது, “மித்ரன் இயக்கி வெற்றி பெற்ற இரும்புத்திரை படத்திற்கு பிறகு. பேங்கிலிருந்து செல்லில் ஒரு குறுஞ்செய்தி வந்தாலே பயமாக இருந்தது. நெஞ்சை அடைத்தது போல் பகீர் என்று இருந்தது.

வங்கியில் இருந்து வரும் குறுஞ்செய்தி இந்தளவிற்கு பயத்தை ஏற்படுத்த முடியுமா? என்று அந்த படத்தைப் பார்த்த பிறகு தான் தெரிந்தது. இந்த படத்திற்கு லக்ஷ்மன் சந்திக்க வைத்தார். அப்போது இந்த படத்தின் ஒரு வரியைக் கூறினார். மிலிட்டரியில் 80-ல் ஒரு உளவாளி குழுவை உருவாக்கினார்கள். மிலிட்டரிகாரர்களை உளவாளியாக நடிக்க சொல்லி கொடுத்தார்கள். பிறகு, ஏன் கஷ்டப்பட வேண்டும்? ஒரு நடிகரை மிலிட்டரிகாரராக மாற்றிவிட்டால் என்ன என்று யோசித்தார்கள்.

அதன்படி ஒரு நாடக நடிகரை அழைத்து வந்து பயிற்சி கொடுத்து உளவாளியாக மாற்றி பாகிஸ்தானிற்கு அனுப்பி வைத்தார்கள் என்று தகவல் கூறினார். அதைக் கேட்டதும் மிகவும் ஆர்வமாக இருந்தது. இந்த கதையை முழுதாக எழுதிவிட்டு வாருங்கள் என்று கூறினேன். அவர் எழுதி விட்டு இந்தக் கதாபாத்திரம் இரட்டை கதாபாத்திரமாக மாறி இருக்கிறது என்று கூறினார். மறுபடியும் இரட்டை வேடமா? வேண்டாம் என்று கூறினேன்.

ஆனால் மித்ரன் கதை கேளுங்கள். இந்த கதைக்கு இரட்டை பாத்திரம் தேவைப்படுகிறது என்று கூறினார். கதைக் கேட்டதும் தானாகவே உளவாளிக்கான பல பார்வைகள் வந்தது. என்னுடைய கேரியரில் இது மிகவும் முக்கியமான படம். மேலும், எத்தனை வேடங்கள் போட்டாலும் எதற்காக போடுகிறோம் என்பதில் தான் அந்த வேடத்திற்கு மரியாதை கிடைக்கும். அதேபோல், நம் இந்திய உளவாளி, நம் மண்ணில் இருக்கும் ஒருவன், அவன் எப்படி சிந்திப்பான், எதற்காக உளவாளி ஆகிறான் என்பது எனக்கு பிடித்திருந்தது.

மேலும், அதை எப்படி ஏமாற்றாமல் உண்மையாக பண்ண முடியும் என்பதற்கு தான் பெரிய மெனக்கெடல் தேவைப்பட்டது. முதல்முறையாக வயதான தோற்றத்தில் நடிப்பதற்கு நிறைய வேலைகள் செய்ய வேண்டி இருந்தது. 40, 50 மற்றும் 60 வயதிற்கு மேல் உடல் ரீதியாக எப்படி மாற வேண்டும் என்பதை புரிந்து கொள்ள நேர்ந்தது. உளவாளி படம் என்பதால் ஜேம்ஸ்பாண்ட் படம் மாதிரி பிகினியும், சிக்ஸ் பேக்கும் இருக்குமா? என்று கேட்காதீர்கள். இது இந்தியன் ஸ்ப்பை த்ரில்லராக இருக்கும்.

இந்த படம் வெற்றியடைய வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன். வெற்றியடைய வேண்டும் என்று நினைத்தால், முதலில் அந்த வெற்றிக்கு நீ தகுதியாக இருக்கிறாயா? என்று யோசித்துப் பார் என்று அண்ணன் கூறுவார். அந்த தகுதிக்கு ஏற்ப நாங்கள் உழைத்திருக்கிறோம் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.




  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!