அமலாபாலுக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் தயாரிப்பாளருக்கு ஜாமீன்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை அமலாபால் இயக்குனர் ஏ.எல்.விஜயை திருமணம் செய்து விவாகரத்து பெற்றார். அதன் பின்னர் பஞ்சாப்பை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரும் பாடகருமான பவ்நிந்தர்சிங் தத்‌ என்ற பூவி (வயது 35) அமலாபால் இடையே நட்பு ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு பழகி வந்தனர்.

புதுவை அருகே உள்ள தமிழக பகுதியான ஆரோவில் அடுத்த பெரிய முதலியார் சாவடியில் சொகுசு வீட்டை குத்தகைக்கு எடுத்து இருவரும் ஒன்றாக தங்கி இருந்தனர். அந்த வீட்டில் அவர்கள் தொடங்கிய திரைப்பட அலுவலகப் பணியையும், ஹெர்பல் பவுடர் வியாபாரம் செய்யும் இடமாகவும் பயன்படுத்தி வந்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு நடிகை அமலாபால், பவ்நிந்தர்சிங் தத் மற்றும் அவரது உறவினர்கள் 20 லட்சம் பணமோசடி செய்ததாகவும், இருவரும் தனிமையில் இருந்த புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டுவதாகவும், நம்பிக்கை மோசடி செய்ததாகவும் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் அமலாபால் தனது உதவியாளர் விக்னேஷ் மூலம் கடந்த மாதம் 29-ம் தேதி புகார் அளித்தார்.

குற்றப்பிரிவு துணைபோலிஸ் சூப்பிரண்டு இருதயராஜ் தாயாரிப்பாளர் பவ்நிந்தர்சிங் தத், அவரது தந்தை சுந்தர்சிங், கனடா நாட்டில் வாழும் அவரது சகோதரி உள்ளிட்ட 12 பேர் மீது மோசடி உள்ளிட்ட 16 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து போலீசார் பெரிய முதலியார் சாவடியில் உள்ள இல்லத்தில் பவ்நிந்தர்சிங் தத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதன்பின்னர் வானூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பவ்நிந்தர்சிங் தத்தை 13 நாள் சிறையில் அடைக்க நீதிபதி வரலட்சுமி உத்தரவிட்டார்.

இந்நிலையில் பவ்நிந்தர்சிங் தத் சார்பில் ஜாமீன் கேட்டு நேற்று வானுர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி பவ்நிந்தர்சிங் தத்துக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பவ்நிந்தர்சிங் தத் உறவினர்களை கைது செய்ய தீவிரம் காட்டி வரும் நிலையில். பவ்நிந்தர்சிங்தத் தரப்பு வக்கீல்கள் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மீதம் உள்ளவர்களுக்கு ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.




  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!