நடிகை சோனாலி போகட் மரணம்- கிளப் உரிமையாளர் உள்பட இருவர் கைது

அரியானா மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. பிரபலமும், நடிகையுமான சோனாலி போகட் (வயது 42), தனது அலுவலக உதவியாளர்களுடன் கோவா சென்றிருந்த நிலையில் கடந்த 22-ந்தேதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். சோனாலி போகட் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரர் கோவா போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து சோனாலியின் உதவியாளர்களான சுதிர் சக்வான், சுக் விந்தர் வாசி ஆகிய 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் வடக்கு கோவா அஞ்சனாவில் உள்ள ரெஸ்டாரண்டில் நடந்த விருந்தில் போதை ஏற்படுத்தும் ஒரு வேதிப் பொருளை தண்ணீரில் கலந்து சோனாலிக்கு கொடுத்ததாக உதவியாளர்கள் ஒப்புக்கொண்டனர்.

இதற்கிடையே சோனாலியின் பிரேத பரிசோதனையில் அவரது உடலில் ரத்த காயங்கள் அல்லாத தாக்குதல் காயங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு சுதிர் சக்வான், சுக்விந்தர் சிங்கை கோவா போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் சோனாலி போகட் கொலை வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சோனாலி பங்கேற்ற இரவு விருந்து நிகழ்ச்சி நடந்த கிளப் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். அந்த கிளப்பின் கழிப்பறையில் போதை பொருள் கைப்பற்றப்பட்டதையடுத்து அவர் கைதாகி உள்ளார். போதை பொருள் தன்மை குறித்து இன்னும் உறுதிப் படுத்தபடவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

அதே போல போதை பொருள் விற்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சுதிர் சக்வான், சுக் விந்தர் வாசி ஆகியோர் தாங்கள், அஞ்சுனா பகுதியை சேர்ந்த தத்தா பிரசாத் கோன்சர் என்பவரிடம் போதை பொருளை வாங்கியதாக தெரிவித்தனர். இதையடுத்து தத்தா பிரசாத்தை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொலைக்கு பின்னணியில் பணபிரச்சினை இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.



  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!