நம்பகத்தன்மை குறித்த சர்ச்சையால் மைக்கேல் ஜாக்சன் பாடல்கள் நீக்கம்

புகழ் பெற்ற பிரபல அமெரிக்க பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன். வேகமான நடன அசைவுகளாலும் இனிய குரலாலும் ரசிகர்களை கவர்ந்தார். பாடல் எழுதுவது, இசையமைப்பது, அதற்கேற்ப நடனம் ஆடுவது என்று பன்முக திறமை கொண்டவராகவும் திகழ்ந்தார்.

மைக்கேல் ஜாக்சனுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து இசை நிகழ்ச்சிகள் நடத்தினார். சமூக சேவையிலும் ஈடுபட்டார். பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி பிறகு நிரபராதி என்று விடுதலை ஆனார். 2009-ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.


இதையடுத்து மைக்கேல் ஜாக்சன் பாடிய பாடல்கள் என 2010-ல் வெளியான பிரேக்கிங் நியூஸ், மான்ஸ்டர் மற்றும் கீப் யுவர் ஹெட் அப் ஆகிய பாடல்களை சோனி மற்றும் பாப் நட்சத்திரத்தின் எஸ்டேட் தங்கள் சமூக வலைதளத்தில் இருந்து நீக்கியுள்ளது.

இந்த பாடல்கள் மைக்கேல் ஜாக்சன் மறைந்து ஒரு வருடத்திற்கு பின்னர் வெளியிடப்பட்டதால் இந்த பாடல்கள் அவர் பாடியது தானா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்தது. மேலும் சில ரசிகர்கள் நீண்ட காலமாக இந்த பாடல்கள் ஜேசன் மலாச்சி என்ற அமெரிக்க பாடகருக்கு சொந்தமானது என்று வாதிட்டு வந்தனர்.

ஆனால் சோனி இதனை மறுத்துள்ளது. இதைத் தொடர்ந்து நம்பகத்தன்மை குறித்த கேள்வி மற்றும் சர்ச்சையால் இந்த பாடல்கள் நீக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பாடல்கள் தொடர்புடைய உரையாடலை கடந்து செல்வதற்கான எளிய மற்றும் சிறந்த வழி அதனை நீக்குவது தான் என ரெகார்ட் கம்பெனி மற்றும் ஜாக்சன்ஸ் எஸ்டேட் நிறுவனம் தெரிவித்துள்ளது.



இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!