‘ மெர்சல்’ பட மனுதாரரிடம் நீதிபதிகள் சரமாரி கேள்வி:வழக்கு தள்ளுபடி!!!


நடிகர் விஜய் நடித்துள்ள மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த சரக்கு சேவை வரி, ‘டிஜிட்டல்’ இந்தியா திட்டம் ஆகியவற்றை கடுமையாக விமர்சித்து இருப்பதாக பா.ஜ.க. தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. அந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ள நிலையில், நிலையில், மெர்சல் படத்துக்கு தடை கேட்டு வக்கீல் ஏ.அஸ்வத்தாமன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.


அதில், சரக்கு சேவை வரி (ஜி.எஸ்.டி.), குறித்து தவறான தகவல் மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும், இந்த படத்துக்கு அவசர கதியில் தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்திய இறையாண்மைக்கு எதிரான காட்சிகளை கொண்ட மெர்சல் படத்தை திரையிட தடை விதிக்கவேண்டும். இந்த படத்துக்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை திரும்பப்பெற உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.


அவரது வழக்கு விசாரணை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.சுந்தர் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்ஙகை விசாரித்த நீதிபதிகள் மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்களால் பொதுமக்களுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கேள்வி கேட்டுள்ளனர்.


மெர்சல் என்பது படம் தான், அது நிஜவாழ்க்கை ஒன்றும் அல்ல, அப்படியே பொதுநலனோடு வழக்கு தொடர்ந்திருந்தால் குடிப்பது, புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் இருந்தால் நீதிமன்றத்தை நாடலாம், அதுமட்டுமின்றி மெர்சலில் மாற்றுத்திறனாளிகள் தவறாக சித்தரிக்கப்படுவதை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருக்கலாமே. கருத்து சொல்வது அவரவரின் உரிமை, சுதந்திரம். கருத்துச் சுதந்திரம் என்பது அனைவருக்குமானது, தனிப்பட்ட ஒருவருக்கு படம் பிடிக்கவில்லையெனில் படத்தை பார்ப்பதை தவிருங்கள். இதற்காக ஏன் நீதிமன்றத்தை நாடுகிறீர்கள் என்று கேட்ட நீதிபதிகள், மெர்சல் படத்தை எதிர்ப்பதில் எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!