நடிகை கங்கனா ரணாவத்துக்கு ‘பத்மஸ்ரீ’ விருது – ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்

பத்மவிருதுகள் வழங்கும் விழாவில் பிரதமர் நரேந்திரமோடி, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ஜெய்சங்கர் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பெருமைக்குரிய செயல்களை செய்தவர்கள், சிறந்த சேவை செய்தவர்கள், சாதனை நிகழ்த்தியவர்கள் போன்றவர்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் பத்மவிபூ‌ஷன், பத்மபூ‌ஷன், பத்மஸ்ரீ போன்ற விருதுகளை வழங்கி வருகிறது. இதன்படி 2020-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டன. மொத்தம் 119 பேர் விருதுக்குரியவர்களாக தேர்வு செய்யப்பட்டு இருந்தனர்.

இதில் 7 பேருக்கு பத்ம விபூ‌ஷன் விருதும், 10 பேருக்கு பத்மபூ‌ஷன் விருதும், 102 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் 29 பேர் பெண்கள், ஒருவர் திருநங்கை ஆவர். இறந்துவிட்ட 16 பேருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டு இருந்தது.

பத்மவிருதுகள் வழங்கும் விழா இன்று ஜனாதிபதி மாளிகையில் நடந்தது. பிரதமர் நரேந்திரமோடி, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ஜெய்சங்கர் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் முன்னிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கினார்.

இந்த நிகழ்வில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்துக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இதுதவிர மேலும் 101 பேருக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பத்மஸ்ரீ விருதுகளை வழங்கினார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!